Australia vs Afghanistan: ஒற்றை ஆளாக இரட்டை சதம்.. ஆப்கானிஸ்தானை அதிர வைத்த மேக்ஸ்வேல்..! ஆஸ்திரேலிய அணி வெற்றி
கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 7) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடின.
முன்னதாக, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். இதில், 25 பந்துகள் களத்தில் நின்ற ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
ஆனால், மறுபுறம் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இப்ராஹிம் சத்ரான். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 143 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 129 ரன்களை குவித்தார். அதன்படி, இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் அடித்த முதல் சதமாக இது பதிவானது.
இதனிடையே, ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட் இழந்த பின்னர் களமிறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் கணிசமான ரன்களை எடுக்க 45 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.
அப்போது களமிறங்கிய ரசித்கான் இப்ராஹிமுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி ஆட்டம் ஆடினார். அதன்படி, 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் அடித்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது.
தடுமாறிய ஆஸ்திரேலியா:
பின்னர், 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். அதில் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
பின்னர் வந்த மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ஆஸ்திரேலிய அணி திணறியது.
20 ஓவர் முடிவதற்குள் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் வசபடுத்தினார்கள்.
ஒற்றை ஆளாக இரட்டை சதம்:
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். தோல்வி அடைந்து விடும் ஆஸ்திரேலிய அணி என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார் மேக்ஸ்வேல். தனி ஒரு ஆளாக ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
அந்த வகையில் 76 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் மாறி மாறி பறக்கவிட்டார். மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களால் எடுக்க முடியவில்லை. தான் சேர்வாக காணப்பட்ட போதும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த வகையில் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள் என மொத்தம் 201 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றியடைச் செய்தார்.
மேலும் படிக்க: Ibrahim Zadran Century: உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கான் வீரர்! ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இப்ராஹிம்!
மேலும் படிக்க: Fast Bowlers: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிடப்படும் இந்திய அணி.. எதிரணியை துவம்சம் செய்யும் பும்ரா, ஷமி..!