Ashes 4th Test: 70 பந்துகளுக்கு டொக்...ஜோ ரூட் டக்...இங்கிலாந்து பரிதாபங்கள்!!
71 வது பந்தில் ஒரு சிங்கிளை தட்டி ஸ்டோக்ஸ் ஒரு வழியாக இங்கிலாந்தின் ஸ்கோர் போர்டை முன் நகர செய்தார். இப்போது இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இங்கிலாந்து மீளுமா?
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இப்போது சிட்னியில் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 70 பந்துகளாக ரன்னே அடிக்காமல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்திருக்கிறது. இங்கிலாந்தின் இந்த சொதப்பலான பெர்ஃபார்மென்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் சார்பில் ஓப்பனர்களான ஹசீப் ஹமீதும் சக் க்ராலியும் களத்தில் இறங்கியிருந்தனர். ஆட்டம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேதே ஹசீப் ஹமீது ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டாக வந்து இன்ஸ்விங் செய்த பந்தை சரியாக கணிக்க முடியாமல் போல்டாகியிருந்தார்.
ஹசீப் 10 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். இதன்பிறகே, அந்த 70 பந்துகள் சம்பவம் அரங்கேறியது. ஸ்டார்க் வீசிய 14 வது ஓவரிலிருந்து போலண்ட் வீசிய 25 வது ஓவரின் நான்காவது பந்து வரை இங்கிலாந்து அணி ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை. அதாவது 11.4 ஓவராக இங்கிலாந்து அணியின் ஸ்கோர் முன்னேறவே இல்லை. ஆஸ்திரேலிய பௌலர்களும் எக்ஸ்ட்ராஸ் என்று கூட ஒரு ரன்னையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்தின் மிக முக்கிய பேட்ஸ்மேன்களே இந்த ஓவர்களை ஆடியிருந்தனர். ரன் அடிப்பதை தாண்டி மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் இந்த 11.4 ஓவர்களில் இங்கிலாந்து இழந்திருந்தது.
ஓப்பனர்களில் ஒருவரான சக் க்ராலி போலண்ட்டின் பந்தில் போல்டாகியிருந்தார். அதே போலண்ட்டின் ஓவரில் லீவ் செய்ய வேண்டிய பந்திற்கு வம்படியாக பேட்டை விட்டு கேப்டன் ஜோ ரூட் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆகியிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரராக ஜோ ரூட்டே சாதனை படைத்திருந்தார். அப்படியான வீரர் இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவதாக க்ரிஸ் க்ரீனின் ரவுண்ட் தி விக்கெட் லெக் ஸ்டம்ப் லைன் டெலிவரியில் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து டேவிட் மலான் அவுட் ஆகியிருந்தார். ஒரு ரன்னை கூட கொடுக்காமல் இங்கிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தியிருந்தது.
இத்தனைக்கும் அணியின் முக்கிய பௌலர்களான ஸ்டார்க்கும் கம்மின்ஸும் இந்த 11.4 ஓவர்களில் வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசியிருந்தனர். அடுத்தக்கட்ட பௌலர்களான போலண்ட்டும் க்ரீஸ் க்ரீனுமே மீதமிருந்த அத்தனை ஓவர்களையும் வீசி இங்கிலாந்தை திணறடித்தனர். போலண்ட் ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடி இனத்தை சேர்ந்தவர். கில்லிஸ்பைக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்காக ஆடிய இரண்டாவது பூர்வக்குடி வீரர் இவரே. கடந்த போட்டியில்தான் ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுகமே ஆகியிருந்தார். அந்த போட்டியிலேயே 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். இளம் வீரரான க்ரிஸ் க்ரீன் தொடக்கக் காலத்தில் அவர் வீசும் லெந்த்களுக்காக டெஸ்ட் ஆடவே தகுதியற்றவர் என விமர்சிக்கப்பட்டவர். இந்த இருவரும் சேர்ந்து இங்கிலாந்தை புரட்டியெடுத்தது சிறப்பான விஷயமாக பார்க்கப்பட்டது.
70 பந்துகளாக ரன்னை அடிக்காமல் இருந்த இங்கிலாந்திற்கு 71 வது பந்தில் ஒரு சிங்கிளை தட்டி ஸ்டோக்ஸ் ஒரு வழியாக இங்கிலாந்தின் ஸ்கோர் போர்டை முன் நகர செய்தார். இப்போது இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இங்கிலாந்து மீளுமா?