உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் : சியோங்கிடம் தோற்று வெள்ளி பதக்கத்தை வென்றார் சிந்து !
உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனஸ் தொடர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த், லக்ஷ்யா சென், சத்விக்சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி மற்றும் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பி.வி.சிந்து மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய நாட்டைச் சேர்ந்த அன் சியோங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை 21-16 என்ற கணக்கில் சியோங் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமிலும் சியோங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த கேமையும் 21-12 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார். இதன்மூலம் 40 நிமிடங்களில் 21-16,21-12 என்ற கணக்கில் சியோங் போட்டியை வென்றார். அத்துடன் தங்கப்பதக்கதையும் வென்றார்.
Our girl P.V Sindhu on the medal podium after finishing runners-up at prestigious #BWFWorldTourFinals .
— India_AllSports (@India_AllSports) December 5, 2021
It was 3rd Final appearance for Sindhu in the year-ending tournament.
Proud of you @Pvsindhu1 pic.twitter.com/GEcOplsF3S
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பி.வி.சிந்து இதுவரை மூன்று முறை அன் சியோங்கிற்கு எதிராக மோதியுள்ளார். அவற்றில் மூன்று முறையும் சிந்து தோல்வியை தழுவியுள்ளார். மேலும் இந்தாண்டு அவர் இரண்டாவது முறையாக அன் சியோங்கிடம் தோல்வி அடைந்துள்ளார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து ஜப்பான் நாட்டின் அகேன் யமாகுச்சியை போராடி வென்றார். இந்தாண்டு நடைபெற்ற பேட்மிண்டன் தொடர்களில் பி.வி.சிந்து 7 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். அவற்றில் நேற்று தான் முதல் முறையாக அரையிறுதியில் வெற்றியை பெற்று இருந்தார். அடுத்து வரும் 12ஆம் தேதி உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற உள்ளது.
அதில் நடப்பு உலக சாம்பியனாக உள்ள பி.வி.சிந்து பங்கேற்க உள்ளார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி தன்னுடைய சாம்பியன் பட்டத்தை சிந்து தக்கவைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்கி பி.வி.சிந்துவிற்கு இந்தாண்டு அனைத்து நாக் அவுட் சுற்று போட்டிகளும் மிகவும் சவாலாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்ன கொடுமை சார் இது... ஒரு நிமிடம் ப்ரேம்ஜியாக மாறிய விராட் கோலி- வைரல் வீடியோ !