Virat Kohli Black Water: விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர்.. விலை எவ்ளோ தெரியுமா....?
விராட் கோலி சாதாரண குடிநீருக்கு பதிலாக சத்துக்கள் அதிகம் நிறைந்த கருப்பு நீரை பயன்படுத்துவதாகவும், அதன் விலை சாதாரண குடிநீர் பாட்டில் விலையை விட 200 மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டி என மூன்று வடிவிலான போட்டிகளிலும் உலகின் நம்பர் 1 வீரராக வலம் வருபவர். விராட் கோலி மிகவும் கட்டுக்கோப்பான உடற்கட்டை கொண்டவர். இதற்காக அவர் தினசரி கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
சிக்ஸ்பேக்கிற்கு சொந்தக்காரரான விராட்கோலி அதற்காக உணவுக்கட்டுப்பாடு முறைகளையும் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில், விராட் கோலி குடிப்பதற்கு சராசரி தண்ணீருக்கு பதிலாக “ ப்ளாக் வாட்டர்” எனப்படும் கருப்பு நீரையே குடிக்க பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இந்த கருப்பு நீரானது சாதாரண நீரை காட்டிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. இந்த நீரில் இயற்கையான கருப்பு காரச்சத்து உள்ளது. இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பந்து வீசும்போதும், பீல்டிங் செய்யும்போதும், பேட்டிங் செய்யும்போதும் அவர்களது உடலில் இருந்து அதிகப்படியான நீர் வியர்வையாக வெளியேறுகிறது.
இதனால், உடலில் உள்ள நீரின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கருப்பு நீர் உதவி செய்கிறது. உடலில் உள்ள பி.எச். அளவையும் இந்த நீர் அதிகரிக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதுமட்டுமின்றி, இந்த கருப்பு நீர் தோலுக்கும் மிக ஆரோக்கியமானது என்றும் கூறுகின்றனர்.
இவ்வளவு சத்துக்களையும் கொண்ட இந்த நீரானது சாதாரண குடிநீரின் விலைகளை காட்டிலும் 200 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு பாட்டில் குடிநீர் விலை ரூபாய் 20-க்கு விற்கப்படுகிறது. ஆனால், இந்த கருப்பு குடிநீரின் விலை லிட்டருக்கு ரூபாய் 3000 ஆயிரம் முதல் ரூபாய் 4 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதற்கு முன்பாக, விராட் கோலி பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எவியன் என்ற குடிநீரை குடிப்பதாகவும், அதன் விலை லிட்டருக்கு ரூபாய் 600 என்றும் தகவல்கள் வெளியானது. 2018ம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலி ஒரு சைவப்பிரியாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தி நடிகைகளான மலைகா அரோரா மற்றும் ஊர்வசி ஆகியோரும் விராட்கோலி பயன்படுத்துவதாக கூறப்படும் இந்த கருப்பு நீரையே குடிக்க பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.