Asian Champions Trophy Hockey:ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: கோல் மழை பொழிந்து அசத்தலாக அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா !
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக மலேசிய அணி இந்த தொடரிலிருந்து விலகியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் டிரா செய்தது. இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 9-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் இன்று இந்திய அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் கால்பகுதியில் இந்திய அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தது. ஹர்மன்பிரீத் சிங் சிறப்பாக முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் முதல் கால் பகுதியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்காரணமாக முதல் கால்பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பகுதியில் இந்திய அணியின் வீரர் தில்பிரீத் சிங் சிறப்பாக ஒரு ஃபீல்ட் கோல் அடித்தார். இதன்காரணமாக முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது கால்பாதியின் தொடக்கத்திலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ஜெர்மன்பிரீத் சிங் ஒரு ஃபீல்ட் கோல் அடித்தார். இதைத் தொடந்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
India end the group stage of the Hero Men’s Asian Champions Trophy Dhaka 2021 with a BANG! 💥
— Hockey India (@TheHockeyIndia) December 19, 2021
A clean sheet & a six-goal victory! 🤝#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/G7nRRYagxu
நான்காவது பாதியின் தொடக்கத்திலே இந்திய அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. மேலும் இந்த கால்பகுதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். அந்த கோல் அடித்த அடுத்த நிமிடத்தில் மேலும் ஒரு ஃபீல்ட் கோலை அடித்தார். இறுதியில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 3 முறையும்(2011,2016,2018), பாகிஸ்தான் அணி (2012,2013,2018) 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக இந்திய-பாகிஸ்தான் அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 2016,2018 தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: கோட் சூட்.. பளபள ப்ளேஸர்.. தோனியும், சாக்ஷி தோனியும் கலக்கும் ஈவண்ட்..