தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது..
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று பிரபலம் அடைந்தவர் கோமதி மாரிமுத்து.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்று பிரபலம் அடைந்தவர் கோமதி மாரிமுத்து. இவர் தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தவர். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடினமாக உழைத்து தடகள வீராங்கனையாக உருவெடுத்தார்.
எனினும் கடந்த 2020 ஜூன் மாதம் இவருக்கு நிகழ்ந்த ஒரு பெரிய சம்பவம் இவரின் வாழ்க்கையை புரட்டி போட்டது. அதாவது கடந்த ஜூன் மாதம் இவரின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது. இதனால் சர்வதேச ஊக்கமருத்து பொருள் தடுப்பு மையம் இவருக்கு 2019 ஆண்டு மே 18 முதல் 2023-ஆம் ஆண்டு மே 17 வரை நான்கு ஆண்டு காலம் தடைவிதித்தது. அத்துடன் இவரிடம் இருந்து 2019-ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் பெற்ற தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டது.
இந்தத் தடை தொடர்பாக, “நான் நிச்சயமாக எந்தவித தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தையும் உட்கொள்ளவில்லை. நான் சாப்பிட்ட அசைவ உணவில் இந்தப் பொருள் கலந்து இருந்ததா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் இந்த தடை தொடர்பான மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. அதில் கோமதி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி உள்ளது தெளிவாக தெரிகிறது. இதனால் அவரின் தடைக்காலத்தை நீக்க தேவை இல்லை. ஆகவே அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டில் கோமதி சார்பில், “2019-ஆம் ஆண்டிற்கு முன்பாக எனக்கு கருகலைந்தது. அத்துடன் எனக்கு பிசிஒஎஸ் என்ற பிரச்சனையும் உள்ளது. இதற்காக மருந்துகள் உட்கொண்டதால் என்னுடைய சிறுநீரில் அதிகளவில் நார்டோஸ்டோர்ன் வெளியானது” என வாதாடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி தடையை நீக்க மறுத்துவிட்டார்.
கோமதி மாரிமுத்து அடுத்து 34 வயதில்தான் தடை முடிந்து தடகள போட்டிகளில் பங்கேற்க முடியும். 34 வயதுக்கு மேல் தடகளத்தில் குறிப்பாக 800 மீட்டர் போன்ற தூர ஓட்டங்களில் மீண்டும் திரும்பி அவரால் சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தமிழ்நாட்டை சேர்ந்த சாந்தி சௌந்தரராஜன் பாலின பிரச்னை காரணமாக தனது பதக்கங்களை இழந்தார். அத்துடன் அவருடைய மேல் முறையீட்டையும் இழந்தார். அதன்பின்னர் அவர் தடகள பயிற்சியாளராக மாறி பல வீரர் வீராங்கனைகளை உருவாக்கி வருகிறார். இந்தச் சூழலில் தற்போது கோமதி மாரிமுத்துவிற்கு தடை வந்துள்ளது, தடகள ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.