Wrestlers Issue: மல்யுத்த வீரர்கள் போராட்டம்.. மத்திய அரசுக்கு எச்சரிக்கை.. களத்தில் குதித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு
இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு மத்தியில், மத்திய அரசுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு மத்தியில், மத்திய அரசுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மல்யுத்த வீரர்கள் போராட்டம்:
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பாஜக எம்,பி. பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி பல நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராடி வந்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச சென்ற மல்யுத்த வீரர்களை, விவசாயிகள் தடுத்து நிறுத்தி சமாதனப்படுத்தினர். இந்த நிலையில் தான், இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு கோரிக்கை:
இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த சில மாதங்களாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் போராடும் சூழ்நிலையை மிருந்த கவலையுடன் உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருகிறது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி சென்றதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது மற்றும் ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது ஆகிய சம்பவங்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். ஆரம்பத்திலேயே பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது ஏமாற்றத்தை உணர்கிறோம். குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகிறோம்.
விரைவில் ஆலோசனை:
இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே செய்ததை போல் உலக மல்யுத்த கூட்டமைப்பு, மல்யுத்த வீரர்களுடன் சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். அதோடு மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
எச்சரிக்கை:
அதோடு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஒக் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்தல் குறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு கூடுதல் தகவல்கள் கோரும். இதற்கு 45 நாள் கெடு வழங்கப்படும். அவ்வாறு செய்யத் தவறினால், உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை சஸ்பெண்ட் செய்யும். இதனால் விளையாட்டு வீரர்கள் எந்த நாட்டையும் சாராத நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. (ஜனவரி மாதம் வீரர்கள் போராட்டம் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது " என தெரிவிக்கப்பட்டுள்ளது"
இதுவரை சர்வதேச அரங்கில் இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து அதிகம் பேசப்படாத நிலையில், உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.