ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?
ஆதியோகியை தரிசிக்கும் பலருக்கும் எழும் கேள்வி, யார் இந்த ஆதியோகி? என்பது தான்.
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி. கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.
ஆதியோகியை தரிசிக்கும் பலருக்கும் எழும் கேள்வி, யார் இந்த ஆதியோகி? என்பது தான். தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் மதம் என்ற ஒரு கட்டமைப்போ, கருத்தியலோ இல்லாத காலத்தில் இமயமலையில் வாழ்ந்தவர் ஆதியோகி.
இந்து கலாச்சாரத்தில் சிவனாக வணங்கப்படும் இவர் யோக கலாச்சாரத்தில் முதல் யோகி அதாவது ‘ஆதியோகி’ என அழைக்கப்படுகிறார். அகத்தியர் உள்ளிட்ட 7 சப்த ரிஷிகள் மூலம் யோக அறிவியலை உலகிற்கு முதன் முதலாக வழங்கியவர். அவர் இவ்வுலகிற்கு உணர்த்த விரும்பிய செய்தி ஒன்றுதான் ‘உள்நோக்கி செல்வதே முக்தி பெறுவதற்கான ஒரே வழி’
இந்த அடிப்படையில், ஈஷா யோக மையத்தில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறார் ஆதியோகி. ஆதியோகியின் திருவுருவம் 34 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது 112 அடி, 147 அடி நீளம் மற்றும் 82 அடி அகலமும் கொண்டது. மேலும் 500 டன் எடையுள்ள ஆதியோகியின் திருவுருவம், கின்னஸ் புத்தகத்தால் ‘உலகின் மிகப்பெரிய மார்பளவு சிற்பம்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
ஆதியோகியின் திருவுருவத்தை வடிவமைக்கையில் ஏன் 112 அடியை நிர்ணயித்தார்கள் என்ற கேள்வியும் எழும். மனிதர்கள் முக்தி நிலையை 112 வழிகளில் அடைய முடியும் என்கிற சாத்தியத்தை உணர்த்தவும், மனித உடலில் உள்ள 112 சக்கரங்களை குறிக்கும் விதமாகவும் ஆதியோகியின் திருவுருவம் 112 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதியோகி அமைந்திருக்கும் இடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அங்கு யோகேஸ்வர லிங்கம் 5 சக்கரங்களை கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யோகேஸ்வர லிங்கத்தின் அருளை உள்வாங்க ஏதுவாய் பக்தர்கள் அவருக்கு நீரும், வேப்பிலையும் அர்ப்பணித்து வழிபடுகின்றனர்.
மேலும் இந்திய சுற்றுலா அமைச்சகம், அதன் அதிகாரப்பூர்வ, ‘இன்கிரிடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் கீழ் ஆதியோகியையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும் ஆகும்.
அனைத்திற்கும் மேலாக ஆதியோகி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, ஆதியோகி முன்பாக நிகழும் உலக பிரசித்தி பெற்ற மஹா சிவராத்திரி விழா. இவ்விழா இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு நடத்தப்படும் ரத யாத்திரை நிகழ்வு, ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத வெளியூர் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. அந்த வகையில் இந்த அண்டிற்கான ரத யாத்திரை கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் தொடங்கியது. 4 ரதங்களுடன் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை 35,000 கி.மீ தூரத்தை கடந்து மார்ச் 8 ஆம் தேதி கோவையை வந்தடைய உள்ளன. இந்த ரத யாத்திரை பக்தர்கள், தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.