Vinayagar Chathurthi 2023: மயிலாடுதுறையில் கடல், ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 195 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி என்ற மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 18 ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாக்காக பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்பட்டனர். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறையில் மாயூரநாதர் கீழவீதியில் அம்மையப்பன் விநாயகர், மற்றும் காமதேனு விநாயகர், வீர விநாயகர், கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பக்தர்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் பல்வேறு கோயில்களில் வைக்கப்பட்டிருந்தன.
இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன. மயிலாடுதுறை சுற்று வட்டாரப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட 25 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் கோலகலமாக நடைபெற்றது. அருணா பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கிய விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தொடங்கி வைத்தார். மின்னொளியால் அலங்கரிக்கபட்டு நான்கு சக்கர வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இளைஞர்களின் குத்தாட்டத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து தங்கள் செல்பொன்களில் படம் பிடித்தனர்.
போலீஸ் பாதுபாப்பு பணியில் இடையூறு அளிக்கும்’ வகையில் செயல்பட்ட இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் சற்று பதட்டம் ஏற்பட்டது. கால்டக்ஸ் பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்து பூம்புகார் கடற்கரைக்கு எடுத்து சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதுபோன்று சீர்காழியில் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 41 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று உப்பனாற்றில் கரைத்தனர்.