Vinayagar Chathurthi 2023: மயிலாடுதுறையில் யானை அபயாம்பிகைக்கு கஜ பூஜை செய்து வழிபட்ட பக்தர்கள்
மயிலாடுதுறையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு கஜபூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 -ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாகவும், மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். இந்த யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும், யானை விரும்பிகளும் பொன்விழாவாக கொண்டாடினர்.
மேலும் அபயாம்பிகை யானைக்கு வெள்ளி கொலுசு, அபயாம்பிகை பெயர் பதித்த கழுத்து செயின் என ஆபரணங்களும் பலர் வாங்கி தந்துள்ளனர். இந்நிலையில் விநாயக சதுர்த்தி என்ற மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாக்காக பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்பட்டு வருகின்றனர். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை அடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகையை சிவவாத்தியங்கள் இசைக்க கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்ந்து தீர்த்தமாக தெளித்தது. பக்தர்கள் யானை மீது மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.