Tirupati Laddu: பக்தர்களே! புகழ்பெற்ற திருப்பதி லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது? இதுதான் வரலாறு!
உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது? எப்போது முதல் பிரசாதமாக வழங்கப்படுகிறது? என்பதை கீழே தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அமைந்துள்ள திருப்பதி திருமலையான் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயில், இந்தியாவிலே பணக்கார கோயிலாக திகழும் இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிவார்கள்.
திருப்பதி லட்டு:
இந்த கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் சிறப்பு பெற்றது. அந்த லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாடு மற்றும் பன்றி கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த ஆந்திரா மற்றம் தெலங்கானாவையும் அதிர வைத்துள்ளது. திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பது அறிந்த பக்தர்களுக்கு அது எப்போது முதல் வழங்கப்படுகிறது? எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பது தெரியாமல் இருக்கும். அதை கீழே விரிவாக காணலாம்.
2014ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற இந்த திருப்பதி லட்டு கி.பி. 1715ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக கடைகளில் விற்பனையாகும் லட்டுகளை காட்டிலும் திருப்பதி லட்டு எடையிலும், வடிவத்திலும் பெரியளவில் காணப்படும். கடந்த காலங்களில் திருப்பதி மலைக்குச் செல்ல போதியளவு போக்குவரத்து வசதிகள் கிடையாது.
ஏன் இந்த வடிவம்?
இதனால், பக்தர்கள் ஏழுமலையை கடந்து சாமி தரிசனம் செய்து மீண்டும் வீட்டிற்குச் சென்று சேர பல நாட்கள் ஆனது. அவ்வாறு சாமி தரிசனம் செய்து நீண்ட பயணம் செய்து பக்தர்கள் வீடு சென்று சேரும் வரை பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரத்யேக முறையில் இந்த லட்டு வடிவமைக்கப்பட்டது. அதன் காரணமாகவே மற்ற லட்டுகளை காட்டிலும் திருப்பதி லட்டு சுவையிலும், வடிவத்திலும் தனித்து தெரிகிறது.
தற்போது வழங்கப்படும் லட்டே நமக்கு பெரிய அளவாக தெரிகிறது. ஆனால், தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட திருப்பதி பிரசாத லட்டு இதைவிட பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது முதல் தற்போது வரை 6 முறை திருப்பதி லட்டின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் திருப்பதி லட்டு 175 கிராம் எடை கொண்டது ஆகும்.
தயாரிக்கப்படுவது எப்படி?
தற்போது தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் லட்டுக்களுக்கு கல்யாண லட்டு என்று பெயர். திருப்பதி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இந்த லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இதற்கு கல்யாண லட்டு என்ற பெயரும் வந்தது. 18ம் நூற்றாண்டின் தொடக்க காலம் முதல் வழங்கப்பட்டு வந்த இந்த திருப்பதி லட்டுகள் தயாரிக்கத் தொடங்கியது முதல் 200 ஆண்டுகளாக விறகு அடுப்பிலே தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. அதன்பின்னரே நவீன வசதிகளுடன் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பதியின் அடையாளமாக திகழும் இந்த லட்டு கோயிலுக்கு மிக அருகில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. கடலை மாவு, சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது. இதற்கு லட்டு பொட்டு என்று பெயர்.
பக்தர்களுக்கு வழங்கப்படும் இந்த லட்டு தயாரிப்பதற்காக தினசரி 400 முதல் 500 கிலோ வரையிலான நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ உலர் திராட்சை, 200 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் சுமார் 4 லட்சம் வரையிலான லட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது.
தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லட்டு தயாரிக்கப்படும் நெய்யானது ஆறு மாதத்திற்கு ஒரு முறை 5 லட்சம் கிலோ கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நெய்யானது ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது.
தயாரிப்பவர்கள் யார்?
இந்த புகழ்பெற்ற திருப்பதி லட்டை அனைவரும் தயாரிக்க அனுமதியில்லை. திருப்பதி லட்டு தயாரிக்கத் தொடங்கிய காலம் முதலே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதை தயாரித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்கள் தலைகளில் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இடுப்பில் வேஷ்டி உடுத்தி, பாரம்பரிய முறைப்படி லட்டுகளை அவர்கள் தயாரிக்கின்றனர்.
லட்டு தயாரிக்கும் பணியில் தினமும் 600 பேர் வரை பணியாற்றுகின்றனர். இவர்கள் 2 வேளைகளில் மாறி, மாறி பணியாற்றுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக ஒரு லட்டும், கூடுதலாக வழங்கப்படும் லட்டுக்களுக்கு ரூபாய் 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.