(Source: ECI/ABP News/ABP Majha)
Tiruchendur Avani Festival: ஆவணித் திருவிழாவில் அருள்பாலிக்கும் முருகன்... திருச்செந்தூர் தேரோட்டத்துக்கு மக்கள் அனுமதி
Tiruchendur Avani Festival 2022 Dates: திருவிழா. மாசித் திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரிய தேருக்கு பதிலாக இதில் சிறிய தேரில் வலம் வருவார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர்(Tiruchendur) கோயில். மற்ற ஐந்து விட்டுகளும் மலையில் அமைந்துள்ள நிலையில், கடற்கரையோரம் அமைந்துள்ள சிறப்பு இந்தக் கோயிலுக்கு மட்டுமே உண்டு. இங்கிருந்து அலைகடலென திரண்டு வரும் மக்களுக்கு முருகன் அருள்பாலிக்கிறார்.
பிரமோற்சவத் திருவிழாக்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழா(Avani Festival) மற்றும் மாசித்திருவிழா என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.
இதில் இந்த ஆண்டு ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் வரை இத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதன் முக்கியத் திருவிழாவான தேரோட்ட விழா வரும் 26ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணித் திருவிழாவின் 7 மற்றும் 8ஆம் நாள்களான 23, 24ஆம் தேதிகளில் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து முருகன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தேரோட்ட நாள்
தொடர்ந்து 26ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல், மாலை 6.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசிக்க நடத்திய மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித் திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார். தெப்ப உற்சவமும் நடைபெறாது.
ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். இங்குள்ள சண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் இந்த ஆவணித் திருவிழா.
கொரோனா காலத்துக்குப் பிறகு பக்தர்கள் அனுமதி
கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் பிரகாரத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தேரோட்டமும் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இலக்கியத்தில் திருச்செந்தூர்
தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் முருகனை பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் எனும் பாடலை பகழிக்கூத்தர் எனும் ஆசிரியர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை காரணமாக அடிப்படை வசதிகளை செய்து தர கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் பக்தர்களும் முன்வைக்கின்றனர்.
ALSO READ | Vinayagar Chaturthi 2022: ஐந்து கரத்தனை யானை முகத்தனை... விநாயகர் சதுர்த்தி வரலாறும் கொண்டாட்டங்களும்!