Vinayagar Chaturthi 2022: ஐந்து கரத்தனை யானை முகத்தனை... விநாயகர் சதுர்த்தி வரலாறும் கொண்டாட்டங்களும்!
Vinayagar Chaturthi 2022 Date and Time: கணபதி, பிள்ளையார், ஆனைமுகன், மூஷிக வாகனன், மோதகப் பிரியன் என பல பெயர்களால் போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வணங்க உகந்த தினம் விநாயகர் சதுர்த்தி.
எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முடிய முதலில் வணங்கப்படுபவர் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான்.
மோதகப் பிரியன் அவதரித்த திதி
கணபதி, பிள்ளையார், ஆனைமுகன், மூஷிக வாகனன், மோதகப் பிரியன், கஜமுகன் என நாடு முழுவதும் பல பெயர்களால் போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வணங்க உகந்த தினம் விநாயகர் சதுர்த்தி.
ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டெம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விநாயகர் அவதரித்த திதி அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் அவதரித்த திதியே விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
புராணக்கதை
சிவபெருமான் ஒருமுறை வெளியில் சென்ற நேரத்தில் குளிக்கச் சென்ற பார்வதி தேவி தனக்கு காவலுக்கு யாரும் இல்லாததால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் பிடித்து அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் கொடுத்தார். பார்வதி தேவியால் உயிர் கொடுக்கப்பட்ட அந்த உருவம் அவருடைய பிள்ளை ஆகிவிட்டது.
பார்வதி தேவி பிள்ளையாரை மற்றவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி விட்டு நீராடச் சென்றபோது, திடீரென்று அங்கு வந்து நின்ற சிவபெருமானை பிள்ளையார்உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை துண்டித்துவிட்டு உள்ளே சென்றார்.
பார்வதி தேவி நீராடி முடித்ததும் வெளியே வந்து பிள்ளையாருக்கு தலை இல்லாததைப் பார்த்தது கடும் கோபமும், ஆவேசமும் அடைந்து அவர் காளியாக உருவெடுத்து வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.
கணேசனாக மாறிய பிள்ளையார்
தேவர்கள் அனைவரும் காளியின் ஆவேச குணத்தை கண்டு சிவனிடம் சென்று முறையிட்ட நிலையில், தனது தேவர்களை அழைத்து வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு சிவன் ஆணையிட்டார். அவர் கூறியபடியே தேவர்களும் வடதிசை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் கிடைத்தது.
தேவர்களும் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்த நிலையில், யானையின் தலையை வெட்டுப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிர் கொடுத்தார் சிவபெருமான். இதை பார்த்ததும் சமாதானம் அடைந்த பார்வதி தேவியார் மனமகிழ்ந்து சாந்தமடைந்தார்.
அந்தப் பிள்ளையாருக்கு சிவன் 'கணேசன்' என பெயர் வைத்து கமது தேவர்களுக்கு தலைவராக நியமித்ததாக புராணத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதுவே பிள்ளையாரின் அவதாரக் கதையாகும். சுக்கில பட்ச சதுர்த்தி அன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கொண்டாட்டம்
நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா பகுதிகளில் 10 நாள்கள் வரை கொண்டாடப்படுகிறது.
இந்தியா தாண்டி, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா மற்றும் இந்தியர்கள் வசிக்கும் பல நாடுகளிலும் விநாயகர் வழிபாடு உள்ளதால் அங்கெல்லாம் இந்தப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் கிபி 5ஆம் நூற்றாண்டில் இருந்து விநாயகர் வழிபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது. கிபி 16ஆம் நூற்றாண்டு மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி காலத்தில் மிகப்பெரும் விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
1893ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான பாலகங்காதர திலகர் ஆண்டுதோறும் இந்துக்கள் இந்த விழாவை ஊர்வலமாகக் கொண்டாட ஊக்குவித்தார்.
அது முதல் நாட்டின் இன்றைய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர்.