சூரசம்ஹாரத்துக்கு பின் முருகன் கோபம் தணித்த தணியல் தலம்: சிறப்பு என்னன்னு பாருங்க!
சூரபத்மாதியர் வதம் முடித்து வடக்கே சென்ற முருகப்பெருமான், இந்த தலத்தில் தேவியர் இருவர் புடை சூழ சிவலிங்க பூஜை செய்தார்.
முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்து முடித்து திருத்தணி செல்லும் பொழுது மத்திய திருத்தணிகை என்று அழைக்கப்படும் தணியல் எனும் ஊரில் அமர்ந்து கோபம் தணிந்து சிவபூஜை செய்த தலமான ஒரே கருவறையில் சிவபெருமானும் முருகப்பெருமானும் காட்சி தரும் அபூர்வமிக்க பழமையான சிவகுக தலம் பற்றி தெரியுமா?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமம் தணியல் உள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத கயிலாசநாதர் ஆலயம். சிவாலயமாக இந்த ஆலயம் இருப்பினும் இங்குள்ள முருகப்பெருமான் புராணச்சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டு விளங்குகிறார். அசுரர் வதம் முடித்து பகை வென்று வடக்கே சென்ற முருகப்பெருமான், இந்த தலத்தில் தேவியர் இருவர் புடை சூழ எழுந்தருளினார். அப்போது சினம் தணிந்து அசுரரை வதைத்த தோஷம் நீங்க சிவலிங்க பூஜை செய்தார்.
ஞான கந்தனாக எழுந்தருளி வழிபட்ட முருகப்பெருமானுக்கு தந்தையும் தாயுமான சிவசக்தியர் காட்சி தந்து முருகனைப் பாராட்டி மகிழ்ந்தார்களாம். இதனால் குளிர்ந்து போன முருகப்பெருமான் சினம் தணிந்து சிறப்பு கொண்டார் எனவும், இதனாலேயே இந்த தலம் “தணியல்” என்றானதாகவும் கூறப்படுகிறது. மகிழ்வுற்ற முருகப்பெருமான் இங்கு வந்து தம்மை வேண்டிய தேவர்களுக்கு எல்லாம் வேண்டிய வரங்களை அளித்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. திருத்தணிகை தலம் போலவே மத்திய திருத்தணிகை என்று போற்றப்படும் தலம் தணியல். அருணகிரிநாத பெருமான் தனது திருப்புகழில் “தணியல் உறையும் தண்டபாணி” தெய்வத்தை போற்றிப் புகழ்ந்துள்ளார்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு – மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச – மயநூலைக்
கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு – ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ – தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு – நிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந – திகுமாரா
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு – மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய – பெருமாளே.
(அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல் வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா...) தேவாதிதேவர்கள் அனைவரும் போற்றும் கடவுள் முருகப்பெருமான். சிவபெருமானின் சிறப்பான வடிவே முருகேசன் என்கின்றன ஆன்மிக நூல்கள். சூரியனின் கதிர் பூமியை அடைவது போல, ஈசனின் சக்தி குவிந்து மண்ணுலகில் கந்தனாக வடிவெடுத்தது என்கிறது கந்தபுராணம்.
சக்கரம் வேண்டி திருமால் வணங்கினார். பிரணவ தத்துவம் கேட்டு சிவன் வணங்கினார், பிரணவத்தின் பொருள் தெரியாமல் பிரம்மன் வணங்கினார். தன் குலத்தைக் காக்க வேண்டி இந்திரன் வணங்கினார் என புராணங்கள் கூறும் பெருமைக்கு உரியவர் முருகப்பெருமான். வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணருக்கு குமார சம்பவத்தை எடுத்துக் கூறி முருகப்பெருமானின் அவதார சிறப்புகளை வர்ணித்தார். அதுமட்டுமா 'கந்தனை வணங்கி அவனிடம் பக்தி வைப்பவர்களுக்கு ஒரு குறையும் நேராது. அவர்கள் ஸ்கந்த லோகத்தில் சிறப்பான நிலையையும் பெறுவார்கள்.
தணியல் முருகப்பெருமான் சதாசிவமாகிய ஈசனிடமிருந்து முதலில் தோன்றிய சக்தியே முருகப்பெருமான் தான் என்பதை 'யாதே ருத்ர சிவா தனூ ' என்கிறது ருத்ர மந்திரம். பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றிய மகாசக்தியே சூரபத்மனையும் அவனது சகாக்களையும் அழிக்க முடியும் என்பதால் தோன்றியவர் முருகப்பெருமான். அதனால் அவரே தேவர்களில் முதன்மையானவர் என்கின்றன ஆன்மிக நூல்கள்.
'படைத்தலைவர்களில் நான் ஸுப்ரமணியன்' என்று கீதையில் உரைக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். படைகளை நடத்தி வெற்றிகளைக் குவிப்பதில் முருகனுக்கு இணையான தெய்வம் இல்லை என்கிறார் அகத்தியர். மகாபாரத்தில் பிதாமகர் பீஷ்மர் படைத் தலைமையை ஏற்கும் முன் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டதாக தகவல் உள்ளது.
பன்னிரு கரங்களில் வேலாயுதம், கோழிக் கொடி, அங்குசம், பாசம், வில்-அம்பு, கத்தி, கேடயம், கோடாரி, சூலம், கதை, சங்கம், சக்கரம் தாங்கி முருகப்பெருமான் போருக்குப் புறப்பட்டதெல்லாம் நன்மையைக் காக்கவன்றோ! 'கந்தன் பாதம் கனவிலும் காக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும் இந்த கந்த சஷ்டி நாளில் விரதமிருந்து அவனைத் தொழுதால் தீராத வினை எல்லாம் தீர்ந்து வாழ்வில் சேராத நன்மை எல்லாம் ஓடி வந்து சேரும் இல்லையா!
வள்ளி-தெய்வயானை சமேத முருகப்பெருமான்
வீரகந்தனாக ஆயுதம் தாங்கும் அவனே சினம் தணிந்து தனது பன்னிரு கரங்களில் ஞானவேல், கரும்பு வில்-மலரம்பு, மணி, ஜபமாலை, கமண்டலம், தாமரை, பூரண கும்பம், நீலோத்பலம், சுவடி, சேவல்கொடி, அபய கரம், வரம் அருளும் ஹஸ்த கரம் என நின்று அருளுவதும் அழகல்லாவா. திருச்செந்தூரில் போர் புரிந்து, சம்ஹாரங்கள் செய்து சினத்தோடு அங்கிருந்து கிளம்பி திருத்தணிகை வந்தார் என்றும், அங்கே சினம் முழுவதும் தணிந்து சிங்கார வேலவனாக அருளினார் என்றும் அறிந்திருக்கலாம். சினம் தனித்ததால் அந்த மலை தணிகை மலை என்றானதும் அறிவீர்கள். அதனால் அங்கு கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றாலும் அங்கு சூர சம்ஹார விழா மட்டும் நடைபெறுவது இல்லை.
திருத்தணிகை தலம் போலவே மத்திய திருத்தணிகை என்று போற்றப்படும் தலம் தணியல். அசுர சக்திகளோடு போரிட்டதால் கடும் சினம் கொண்ட முருகப்பெருமான் இந்த அழகிய கிராமத்தில் தங்கி இருந்து தனது சினம் தணிந்ததால் இந்த ஊரே தணியல் என்றானதாம். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலபூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.