கொட்டும் மழையில் யோக நரசிம்மர் ஆலய குடமுழுக்கு விழா.....குடை பிடித்தபடி பக்தர்கள் சாமி தரிசனம்..!
கலசத்தில் ஊற்றப்பட் புனித நீர் ஆலயத்தை சுற்றி இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு நிகழ்வானது கொட்டும் மழையில் குடைபிடித்தபடியும் மழையில் நனைந்தபடியும் குடமுழுக்கை கண்டுகளித்தனர்.
கொட்டும் மழையில் நடைபெற்ற யோக நரசிம்மர் ஆலய குடமுழுக்க விழாவில் குடை பிடித்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இன்று குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் பெருமங்கலம் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத யோக நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத யோக நரசிம்மர் தெற்கு நோக்கி தனி ஆலயமாக அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. இந்த யோக நரசிம்மர் ஆலயம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து வழிபாடு இல்லாமல் இருந்து வந்துள்ளது. நரசிம்மரை வழிபடுவதால் அனைத்து கஷ்டங்களையும் போக்கி எல்லா விதமான இன்பங்களையும் தருவதாக நாரத புராணத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது என்றும், இந்த வழியிலே இந்த ஆலயத்தில் பக்தர்கள் நரசிம்மரை வணங்குவதால் மனோபயம் காய்ச்சல், விஷக்கடிகள், உடல் ஆரோக்கியம், விவாக தடைகள், புத்திர பாக்கியம், கல்வி உத்தியோகம், பணம், புகழ், கடன் நிவர்த்தி, செய்வினை தோஷங்கள் போன்ற பிரார்த்தனைகளை நிவர்த்தி செய்து விடுவதாக நம்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆலயத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிராமவாசிகள் முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக கட்டத் தொடங்கினர். இந்தப் பணிகள் என்பது நிறைவு பெற்றுள்ளதை தொடர்ந்து தற்போது இந்த யோக நரசிம்மர் ஆலயத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முன்னதாக கடந்த 29 ஆம் தேதி நரசிம்ம சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை சேவித்தல் மகா சாந்தி ஹோமம் நூதன உற்சவமூர்த்திக்கு கண்திறத்தல் உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம் இரண்டாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றது. இன்று காலை திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை சுப்ரபாதம் விஸ்வரூப பூஜை கால சந்தி திருவாராதனம் மூல மந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்று பூர்ணாஹதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கட புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீரை அர்ச்சகர்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்த பின்னர் ராஜகோபுரத்திற்கு புனித நீர் கடத்தை எடுத்துச் சென்றனர். ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலசத்தில் ஊற்றப்பட் புனித நீர் ஆலயத்தை சுற்றி இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு நிகழ்வானது கொட்டும் மழையில் நடைபெற்றது. பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடியும் மழையில் நனைந்தபடியும் குடமுழுக்கை கண்டுகளித்தனர். இந்த நிகழ்விற்கு பெருமங்கலம் மட்டுமல்லாது சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று மாலை உற்சவரான ஸ்ரீதேவி பூமி தேவி சமேத ஸ்ரீ பக்தவச்சல பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண காட்சியினை கண்டு களிக்க உள்ளனர். அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு வீதி உலா காட்சி நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பத்துக்கும் மேற்பட்ட குடவாசல் காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் குடவாசல் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. மேலும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக நடைபெற்ற இந்த ஆலயத்தின் திருப்பணிகளை பரப்பரை அறங்காவலர்கள் சிங்கப்பூரை சேர்ந்த சாந்தி தனபால் சேங்காலிபுரம் வெங்கடேச பட்டாச்சாரியர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது