மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய சோத்தமங்கலம் பெருமாள் கோயில் சிறப்புகள்
ராஜராஜ சோழனுக்கு புத்திரப் பாக்கியம் கிட்டியதால், இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
தஞ்சாவூர்: ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிரம்பி வழிந்ததுதான் தஞ்சாவூர் மாவட்டம் என்றால் மிகையில்லை. உலகமே வியந்து பார்க்கும் பெரிய கோயில், பிரமாண்ட அரண்மனை, சரஸ்வதிமகால் நூலகம் என்று ஏராளமான ஆச்சரியங்களை உள்ளடக்கியது தஞ்சாவூர்.
அந்த வகையில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிவன் கோயில்களை ஏராளமாக கட்டியுள்ளார் என்பதை அனைவரும் அறிந்தது தான். ராஜராஜ சோழன் கட்டிய வைணவக் கோயில் ஒன்று உள்ளது என்பது தெரியுங்களா? அது எங்குள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சோழ சாம்ராஜ்யத்தை உலகுக்கு எடுத்துச் சென்ற மாமன்னர்களில் மிக முக்கியமான ஒருவர் என்றால் அது ராஜராஜ சோழன். அவர் தனக்கு மோட்சம் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, விஷ்ணுவை வழிபட்டால் மோட்சம் சித்தியாகும் என்று சிவபெருமான் கூறியவுடன் சோழ தேசமெங்கும் விஷ்ணுவைத் தேடி ராஜராஜ சோழன் சென்றார்.
அப்படி தேடிக்கொண்டே சென்றபோது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சோத்தமங்கலம் என்னும் சிற்றூருக்குச் சென்றார். அங்கு காலை நேரத்தில் சூர்யோதய தருணத்தில் அவ்வூரிலுள்ள தர்சபுஷ்கரணி குளத்தில் ராஜராஜ சோழன் குளித்தபோது, குளத்தின் நீரில் கோயில் ஒன்றின் கோபுரம் நிழலாய் தெரிந்தது. அதைக் கண்டு வியப்புற்ற ராஜராஜ சோழன் அங்கிருந்த விஷ்ணுவான பெருமாளை வழிபட்டு கோயிலை நிர்மாணித்தார் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து, ராஜராஜ சோழன் தினமும் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கியதால் நாளடைவில் அன்னதானபுரம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் அது சோத்தமங்கலம் என மருவியது.
இந்தக் கோயிலில் உள்ள பெரியாழ்வார், யானையின் மேல் அமர்ந்து தன் கைகளில் யானையின் மணியைக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இந்தக் காட்சி வல்லப தேவ பாண்டியன் அவையில் எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணனே பரத்வம் என்று நிர்ணயித்து பெரியாழ்வார் ஆண்டாள் நாச்சியாரைப் பெற்றார் போல, ராஜராஜ சோழன் ஸ்ரீரங்கநாதப் பெருமானைத் தொழுத பின்னரே அவருக்குக் குழந்தை பிறந்தது என்பது இந்த திவ்யமான திருத்தலத்தின் சிறப்பாகும்.
இந்த தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ராஜராஜ சோழன் கட்டிய வைணவக் கோயில் இது மட்டுமே. தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுர கோஷ்டத்திலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில் கோபுர கோஷ்டத்திலும் நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் வகையில் சிற்பங்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பெருமாளுக்கும் சோழர்கள் காலத்தில் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
ஆரம்ப காலத்தில் இந்தக் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் பலரது படையெடுப்புகளால் இந்த கோயில் இடிக்கப்பட்டு, சிதிலமடைந்தது. தற்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் இந்த கோயிலை திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தி உள்ளனர்.
இந்தக் கோயிலில் ராஜராஜ சோழனுக்கு புத்திரப் பாக்கியம் கிட்டியதால், இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அவ்வாறு வழிபட்டு பிரார்த்தனை நிறைவேறியதால் நேர்த்திக்கடனாக நடைவண்டியை வாங்கி பெருமாளுக்கு இன்றளவும் அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏராளமான கோயில்கள் தஞ்சையில் இதுபோன்று பல்வேறு வரலாறுகளை தாங்கி கம்பீரமாக நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.