தஞ்சாவூர், பாபநாசம் பகுதி அம்மன் கோயில்களில் பால்குட விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாபநாசம் அருகே மதகரம் கிராமம் மாந்தோப்பு மட்டையாயான்திடலில் அமைந்துள்ள ஶ்ரீஅழகு காமாட்சி அம்மன் ஆலய பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் இருந்து கோட்டை ஜக்கேராவ் சந்து மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
தஞ்சை மேலவீதியில் உள்ள கோட்டை ஜக்கேராவ் சந்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சித்திரை மாதத்தில் பக்தர்கள் ஆண்டுதோறும் பால்குடம் எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று காலை சிவகங்கை பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சங்கரநாராயணன் கோயில் வழியாக வந்தனர்.
இதில் பக்தர்கள் அலகு காவடி, செடில் காவடி உட்பட பல்வேறு காவடிகள் எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து கோட்டை ஜக்கேராவ் சந்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு நடந்த திவ்ய சீராபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு உற்சவ அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பக்தர்கள், கமிட்டியாளர்கள் மற்றும் தெரு மக்கள் செய்திருந்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் ஊர்வலம்
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கஞ்சிமேடு பகுதியில் அமைந்துள்ள அத்தனூர் அரிய செல்லம் ஆலய பால்குடம் மற்றும் உற்சவர் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாபநாசம் திருமலைராஜன் ஆற்றின் மேல் கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், மாலையில் உற்சவர் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது. உற்சவ வீதி உலா முடிந்து திருக்கோயில் வந்தடைந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
வினைதீர்த்த மகா மாரியம்மனுக்கு அபிஷேகம்
மேலும் பாபநாசம் படுகை புதுத்தெருவில் அமைந்துள்ள வினை தீர்த்த மகா மாரியம்மன் ஆலய பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாபநாசம் திருமலைராஜன் ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் தப்பாட்ட இசை நிகழ்ச்சி உடன் பால்குடம், காவடி, வேல்வீதி உலா, அலகு காவடி, ஆகியவற்றுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிறகு கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அதனை தொடர்ந்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு வான வேடிக்கையுடன் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை அம்மன் அலங்கார தேரில் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாபநாசம் படுகை புதுத்தெரு கிராமவாசிகள் செய்திருந்தனர்.
அழகு காமாட்சி அம்மன் கோயில் பால்குட விழா
இதேபோல் பாபநாசம் அருகே மதகரம் கிராமம் மாந்தோப்பு மட்டையாயான்திடலில் அமைந்துள்ள ஶ்ரீஅழகு காமாட்சி அம்மன் ஆலய பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம், கருப்புசாமி அருவாள், அக்னி சட்டி, சூலம், பால்குடம் காவடி, அலகு காவடி எடுத்து வந்து பக்தர்கள்நேர்த்தி கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்குசிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.