sabarimala: சபரிமலையில் பெண் பக்தர் உயிரிழப்பு! 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்! புதிய கட்டுப்பாடுகள் ஏன்?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து 5 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த வரும் 24ஆம் தேதி வரை 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. 20,000 பேருக்கு ஸ்பாட் புக்கிங் அனுமதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் ச்தொடங்கியதை முன்னிட்டு, அங்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சணக்கான பக்தர்கள் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது. மேலும், நேற்று பெண் பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் சிலர் சாமியை தரிசிக்காமல் திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது வரும் திங்கட்கிழமை வரை ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 5,000 ஆகக் குறைத்துள்ளனர். ஸ்பாட் புக்கிங்கில் தினமும் 20,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த அதனை குறைந்துள்ளனர். பக்தர்கள் வனத்துறையிடமிருந்து பாஸ்களைப் பெற வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த பாஸ்களைப் பெறுவதற்கான நடைமுறை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், அதிகாரிகள் ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதித்தனர். .அந்த நேரத்தில் 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால், கூட்ட நெரிசல் கட்டுப்படுத்துவது மேலும் கடினமாக இருந்தது. கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களுக்கு மறுநாள் தரிசனம் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் வருகையை எளிதாக்க, நிலக்கல்லில் ஏழு கூடுதல் முன்பதிவு மையங்கள் செயல்படத் திட்டமிடப்பட்டன. மேலும் சன்னிதானத்தில் வரிசைகள் சீரமைக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பம்பாவிலிருந்து ஆம்புலன்சுக்கு எந்த உதவியும் கிடைக்காததால் பம்பாவிலிருந்து பத்தனம்திட்டாவிற்கு அனுப்பப்பட்டனர். பத்தனம்திட்டாவிலும் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.





















