Purattasi: இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை! காலை முதல் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. நடப்பாண்டிற்கான புரட்டாசி மாதம் கடந்த மாதம் 17ம் தேதி பிறந்தது. புரட்டாசி மாதம் வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. புரட்டாசி மாதத்தில் உள்ள ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை:
இந்த புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமையுடன் விஜயதசமி கொண்டாட்டமும் சேர்ந்து வருவதால் பக்தர்கள் இந்த கடைசி சனிக்கிழமையை தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதுகின்றனர். இதன் காரணமாக, காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக, பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட வைணவத் தலங்களில் பக்தர்கள் காலை முதலே திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் கோயில்களிலும் சிறப்பு வழிபாடும், பூஜையும் நடைபெற்றது.
கோயில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்:
மாலையிலும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் அதிகளவு குவிந்து வருவதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம், சாமி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதாலும் திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திருப்பதியிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
விஜயதசமி, புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் சில பக்தர்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகளும் இன்று நடைபெற்றது. பெருமாளுக்கு படையலிட்டு விளக்கேற்றி வழிபடும் பழக்கமும் சில பக்தர்களுக்கு உண்டு. பால் பாயாசம், தயிர் வடை வைத்து நைவேத்தியமாக பெருமாளுக்கு இட்டும் வீடுகளில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருமாள் கோயில் மட்டுமின்றி சிவாலயங்கள், முருகன் கோயில்கள், மாரியம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்படுகிறது.