Panguni Uthiram 2025: கல்யாணம் ஆகலயா? பங்குனி உத்திரத்தில் திருமண விரதம் இருங்க.. டும் டும் டும் தான்
Panguni uthiram 2025: பங்குனி உத்திரம் நன்னாளில் திருமணம் ஆகாத இளைஞர்கள் திருமண விரதம் இருப்பது எப்படி என்பதை கீழே காணலாம்.

Panguni uthiram 2025: தமிழ் மாதங்களில் மிகவும் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் பங்குனி மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் பங்குனி உத்திரம் தமிழர்களுக்கு மிகவும் உகந்த நாளாகும். பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே பங்குனி உத்திரம் ஆகும்.
பங்குனி உத்திரம்:
நடப்பாண்டிற்கான பங்குனி உத்திரம் வரும் ஏப்ரல் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் நன்னாளில் திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் அவர்கள் விரும்பியவருடன் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த பங்குனி உத்திர நன்னாளில்தான் அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவபெமான் - பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகிறது. ராமபிரான் - சீதாதேவி திருமணமும் இதே பங்குனி உத்திர நன்னாளில் நடந்ததாகவே கூறப்படுகிறது.
மேலும், பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன், ஸ்ருத கீர்த்தி. தேவேந்திரன் - இந்திராணி திருமணம் நடைபெற்றதும் இதே நன்னாளில்தான் ஆகும். குறிப்பாக, தமிழ்க்கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்ததும் இதே பங்குனி உத்திர நன்னாளிலே ஆகும்.
திருமண விரதம் இருப்பது எப்படி?
விரதம் இருப்பதற்கு ஏதுவாக முதல் நாளிலே வீடு மற்றும் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், பங்குனி உத்திர நன்னாளில் அதிகாலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.
வீட்டில் உள்ள சாமி படங்களை முதல் நாளே சுத்தம் செய்து கொள்வது நல்லது ஆகும். இல்லாவிட்டால் காலையில் சுத்தம் செய்துவிட வேண்டும்
பங்குனி உத்திர நன்னாளில் திருமண விரதம் இருக்க வேண்டுபவர்கள் அந்த நாள் முழுவதும் விரதமர் இருப்பது கூடுதல் சிறப்பாகும். 3 வேளையும் விரதம் இருக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒரு வேளை விரதம் இருக்கலாம்.
இந்த நன்னாளில் காலையிலே பூஜை செய்து பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். பூஜையில் வெற்றிலை, பாக்கு இடம்பெறுவது நல்லது ஆகும்.
வீட்டில் செய்யப்படும் பூஜையில் முருகன் விக்ரஹம், வேல் ஆகியவை நீங்கள் பூஜையறையில் வைத்திருந்தால் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவை கொண்டு பூஜை செய்யலாம்.
மேலே கூறிய பொருட்களை வாங்க இயலாதவர்கள் சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து அபிஷேகம் செய்யலாம். பூஜையில் மலர்களை கொண்டு முருகன் உள்ளிட்ட சாமி படங்களுக்கு பூஜை செய்யலாம்.
பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் நடைபெற வேண்டி கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஓம் சரவணபவ என்றும் முருகன் நாமத்தை சொல்லி பூஜை செய்யலாம். சிவபெருமானுக்கு உரிய நாமத்தைச் சொல்லியும் மனதார வேண்டலாம்.
இந்த நன்னாளில் விரதம் இருக்கும் இளைஞர்கள் தங்களது கவலைகள், குறைகளை சொல்லி புலம்பாமல் தங்களது வேண்டுதல்களை மட்டும் மனதார உருகி இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இரவில் பால், பழம் சாப்பிட்டு தனது விரதத்தை நிறைவு செய்து காெள்ளலாம்.

