பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை: பக்தர்கள் செலுத்திய தொகை இத்தனை கோடியா?
பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 2 கோடியே 94 இலட்சத்து 872 கிடைத்துள்ளது. தங்கம் 907 கிராமும், வெள்ளி 25ஆயிரத்து 509கிராமும் கிடைத்தது.
பழனிதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ. 2.94 கோடியை தாண்டியது.
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.
பழனி முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது.vவிழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து பழனிக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது.
இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 2 கோடியே 94 இலட்சத்து 872 கிடைத்துள்ளது. தங்கம் 907 கிராமும், வெள்ளி 25ஆயிரத்து 509கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 645 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் என பலர் பங்கேற்றனர்.





















