Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்
Axiom 4 Launch: நாசாவின் ஆக்சியம் 4 திட்டக் குழு ஏழாவது முயற்சியில் வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

Axiom 4 Launch: நாசாவின் ஆக்சியம் 4 திட்டக் குழுவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணம் ஏற்கனவே 6 முறை திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்சியம் 4 திட்டம்:
பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து, இந்திய விமானப்படை விமானியான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா அடங்கிய 4 பேர் கொண்ட குழு, ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில், ஃபால்கன் 9 ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியுள்ளது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து விண்வெளிக்கு புறப்பட்டது. 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்குப் புறப்பட்ட அதே ஏவுதளம் இதுவாகும். 1984 ஆம் ஆண்டு சோவியத் பயணத்தின் ஒரு பகுதியாக விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்திய விண்வெளி வீரர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வீரர் என்ற பெருமை குரூப் கேப்டன் சுக்லாவையே சேரும்.
LIFTOFF of Axiom-4 🚀
— ISRO Spaceflight (@ISROSpaceflight) June 25, 2025
After 41 long years, an Indian astronaut is finally on his way to space! 🇮🇳 pic.twitter.com/2KIq7IacCu
ஆக்சியம் 4 குழு விவரங்கள், பணிகள்:
சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய இந்த பயணத்தில் சுக்லாவுடன், போலந்தின் நிபுணர்களான ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் அமெரிக்காவின் கமாண்டர் பெக்கி விட்சன் ஆகியோர் உள்ளனர். இந்த குழு பதினைந்து வார காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, 30-க்கும் மேற்பட்ட நாடுகள் சார்பில் 60 விதமான அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். அவற்றில் ஏழு இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன. குரூப் கேப்டன் சுக்லா விண்வெளியில் இருந்து ஒரு விஐபியுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது.சுமார் 28 மணி நேர பயணத்தைத் தொடர்ந்து, ஆக்ஸியம்-4 குழுவினர் நாளை மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 முறை வந்த சிக்கல்கள்:
- ஆக்சியம் 4 குழு முதலில் மே 29 அன்று விண்வெளிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது. ஆனால்,ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் தடைபட்டது.
- ஜூன் 8ம் தேதி, பால்கன் 9 ராக்கெட் ஏவப்படுவதற்கு போதுமான அளவு வானிலை சாதகமாக இல்லை என கூறி அடுத்த நாளுக்கு ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது
- ஜூன் 9,ம் தேடி மோசமான வானிலை காரணமாக ஏவுதல் மீண்டும் ஒரு நாள் தாமதமானது
- ஜூன் 10ம் தேதி, இயந்திரத்தில் ஆக்ஸிஜன் கசிவு மற்றும் ஒரு இயக்கியில் ஒரு கோளாறு கண்டறியப்பட்டு பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
- ஜூன் 11 அன்று, ரஷ்யாவால் கட்டமைக்கப்பட்ட ஸ்வெஸ்டா தொகுதியில் ஏற்பட்ட அழுத்த மாற்றம் காரணமாக பயணம் மீண்டும் தாமதமானது
- ஜூன் 19ம் தேதியன்று மேற்கொள்ளப்படவிருந்த பயணம் வானிலை மற்றும் விண்வெளி பயணிகளின் ஆரோக்கியம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டுஒத்திவைக்கப்பட்டது
- ஜுன் 22ம் தேதி பயணம் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில், பழுதுபார்ப்பிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்படும் திறனை ஆராயும் நோக்கில், பயணம் ஒத்திவைக்கப்படுவதாக ஜுன் 20ம் தேதி நாசா அறிவித்தது.
இந்த 7 முயற்சிகளுக்குப் பிறகு, 8வது முயற்சியில் ஆக்சியம் குழு தனது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.





















