புகழ்பெற்ற துலா உற்சவ விழா - வதான்னேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் புகழ்பெற்ற துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான வதான்னேஸ்வரர் ஆலய கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை புராண கால சிறப்பு மிக்க நகராகும். சமயக்குரவர்களால் பாடல்பெற்ற புகழ் பெற்ற ஆலயங்கள் மயிலாடுதுறையில் காவிரியின் இருபுறமும் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களில், ஆண்டு தோறும் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் சிறப்புமிக்கதும் புகழ் பெற்றதும் ஆகும். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகள், தங்கள் பாவத்தை போக்கிக்கொள்ள ஐப்பசி மாதம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுவதாக புராணம் தெரிவிக்கின்றது.
இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம்.
இதற்காக ஐப்பசி மாதம் கடைசி நாளன்று கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சி காவிரியில் நடைபெறும். இதனையொட்டி, பாடல்பெற்ற மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம், புனுகீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். இதற்கான கொடியேற்றம் இன்று வதான்னேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. முன்னதாக, கொடி மரத்திற்கு விஷேச, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்றத்தில் ஆலய தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார், பூஜைகளை செய்து வைத்தார்.
கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 13 -ம் தேதியும், திருத்தேரோட்டம் 15 -ம் தேதியும், கடைமுக தீர்த்தவாரி 16 -ம் தேதியும் நடைபெறுகிறது. பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் துவங்கியுள்ள நிலையில் 16 -ஆம் தேதி கடை முக தீர்த்தவாரியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.