வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு
மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு, சனி கவசம் பாடிய, இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஶ்ரீ தேவி, பூதேவி சமேத சீனுவாசபெருமாள் தேரில் எழுந்தருளினர். அங்கு மகாதீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து தேரானது இறுதியாக ஆலயத்தில் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தினந்தோறும் இங்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற பெருமாள் வீதியுலாவில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் அண்ணவாகனத்தில் எழுந்தருளினார். வேதியர்கள் மந்திரம் முழங்க, சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்று வானமுட்டி பெருமாள் வீதியுலா சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடாந்து கோயிலை வந்தடைந்த பின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயிலில் 102 -ஆம் ஆண்டு கருட சேவை உற்சவத்தில், கருட வாகனத்தில் வீதி உலா வந்த கிருஷ்ண பகவானுக்கு ஏராளமான பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவில் பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 102 -ஆம் ஆண்டு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, காளிங்க நர்த்தன கிருஷ்ண பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வீதியுலாவில் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளில் முன்பு சுவாமிக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அருளாசி கூறினார்.
தமிழ்நாடு அரசின் ஆடல் கலைமணி விருது பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த புவனேஸ்வரி சுகுமார் நடத்தி வரும் நிருத்யாலயா நாட்டியப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் சலங்கை பூஜை விழா எனப்படும், பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, சலங்கை பூஜை செய்து, மாணவிகளுக்கு சலங்கையும், சான்றிதழையும் வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பரதக் கலையின் சிறப்புகள் குறித்து ஆசியுரை ஆற்றினார். அப்போது, அவர் நாட்டியக் கலைக்கு முதற்கடவுள் நடராஜ பெருமான். அதனால் தான் ஆடல் கலையே தேவன் தந்தது என்று சொல்வார்கள். 108 விதமான நடனங்கள் சுவாமியே செய்து காட்டியுள்ளார். எனவே, இந்த நடனக் கலையானது மிக உன்னதமானது. உலகெங்கும் பரவிவரும் இந்த கலையை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.