ஆன்மீகம்: மயிலாடுதுறையில் இன்று பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு விழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஏராளமான கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பொன்னூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமை வாய்ந்த பிரஹன்நாயகி சமேத ஆபத்ஸகாயேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வந்தனர். கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவுற்றது.
அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி செய்யப்பட்டு, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இதே கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, நீளாதேவி சமேத கரியமாணிக்கம் பெருமாள் கோயிலிலும் இன்று சம்ப்ரோக்ஷணத்தை கும்பாபிஷேகத்தை பட்டாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மேலும், சீதளா மகாமாரியம்மன், காமாட்சி அம்மன், அய்யனார் உள்ளிட்ட மொத்தம் 8 கோயில்களில் இன்று பொன்னூர் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
ஆக்கூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து பூர்ணாகதியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசங்களை அடைந்துள்ளனர். அதனை அடுத்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் ராஜகோபால பெருமாள் திருக்கோயில் மற்றும் ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால பெருமாள் சன்னதி சீதா லட்சுமணன் அனுமத் சமேத கோதண்டராமன் சன்னதி கருடாழ்வார் சன்னதி ராஜகோபுரம் ஸ்ரீ அபயகர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுரத்திற்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீப ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உதவி ஆணையர் முத்துராமன் வழிகாட்டுதல் படி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் கண்ணதாசன் பத்ரி நாராயணன் மற்றும் செயல் அலுவலர் உமேஷ் குமார் ஏற்பாடுகள் செய்திருந்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் காஞ்சனமாலா சேகர், ஊராட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
வை.பட்டவர்த்தி வலம்புரி செல்வ விநாயகர், காலபைரவர், மகாமாரியம்மன் ஆலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வை.பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன், காலபைரவர், ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றது. கும்பாபிசேகத்தை ஒட்டி, யாகசாலை அமைத்து, புனிதநீர் அடங்கிய கடங்களை வைத்து, நான்குகால யாகபூஜை நடைபெற்றது. பின் பூர்ணாகுதி நடைபெற்று, புனிதநீர் கடங்களை வேதவிற்பன்னர்கள் தலையில் சுமந்து, மேள தாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க கடம் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுரங்களை சென்றடைந்தது. பின், வேதியர்கள் மந்திரம் ஓதி, புனிதநீரை கோபுர கலசங்களில் ஊற்றி, மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.