தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்ற ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்..!
தருமபுரம் ஆதீன மடத்தில் புதிதாக கட்டப்பட்ட ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீன மடத்தில் புதிதாக கட்டப்பட்ட ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு அண்மையில் புதிதாக ஞானபிரகாச விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபலிபுரத்தில் செய்து ஒன்றரை டன் எடை கொண்ட விநாயகர் சிலை கிரேன் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, விநாயகர் சிலையை சுற்றிலும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு, கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்புக்குரிய, காளிதேவி வழிபட்ட பழமை வாய்ந்த தலமான ஓம்காளீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயகுரவர்கள் நால்வராலும், தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய பழமையான தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
காளிதேவி, குத்தாலத்தில் சிவனை வேண்டி கோயில் அமைத்து நீண்ட காலம் வழிபாடு நடத்தியதன் பலனாக, மான், மழு தரித்து, சிவ கணங்களோடு சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழா கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி ஆறு கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று காலை 6 -ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாள வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.