CM MK Stalin: “ஆளுநர் புருடா விடுகிறார்.. அவர் பதவியே வேஸ்ட்” ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
'நான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இங்க இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மட்டும் மாற்றி விடாதீர்கள்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமண விழா சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
திராவிட மாடல்:
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”முதன்முதலாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என சொன்னபோது, எந்த மாநிலமும் அதை நிறைவேற்ற முன்வரவில்லை. ஆனால் தமிழ்நாடு முன்வந்தது, மாநிலத்தின் முதலமைச்சராக கலைஞர் இருந்தார்.
நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த போது 40, இப்போது 50 சதவிகிதமாக இருக்கிறது. போகிற போக்கில் பார்த்தால் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்துவிடும் போல இருக்கிறது.நான் வேதனையுடன் சொல்லவில்லை. மிக மகிழ்ச்சியுடன் தான் தெரிவிக்கிறேன். இதுதான் திராவிட மாடல்.
ஆளுநர் பதவியே வேஸ்ட்:
இன்னைக்கு யார், யாரோ பெரிய பெரிய பதவியில் இருந்துக் கொண்டு திராவிடம் என்றால் என்ன என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பதவியே வேஸ்ட். அதுவும் பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார்கள். திராவிடம் என்றால் என்ன கேட்க வைத்துள்ளதே திராவிடம் தான். கடந்த இரண்டு நாட்களாக என்னென்ன புருடா விடுகிறார் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி சொல்லும் ஆளுநரே அவரே தொடர்ந்து இருக்கட்டும். அது நம்முடைய பிரச்சாரத்துக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். நான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இங்க இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மட்டும் மாற்றி விடாதீர்கள்.
தேர்தலுக்கு தயாராக இருங்கள்:
அவர் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது இருக்கட்டும். அதில் பல சௌகரியங்கள் எங்களுக்கு இருக்கு. ஆளுநர் பேசுவதை மக்கள் பொருட்படுத்தவில்லை. இன்னைக்கு சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றோமோ, 5 மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.