(Source: ECI/ABP News/ABP Majha)
Big Boss Vijay Varma: ’பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவேன் என நினைக்கவில்லை’ - விஜய் வர்மா வருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விஜய் வர்மா கூறியுள்ளார்.
தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவேன் என நினைக்கவில்லை என்று மிரியம்மா ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் வர்மா கூறியுள்ளார்.
வெளியேற்றப்பட்ட விஜய்வர்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் சீசன் 7ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக விஜய் வர்மா பங்கேற்றிருந்தார். போட்டியின் முதல்வாரத்தில் கேப்டனாக இருந்த விஜய் வர்மா அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் போட்டியாளர்களை மிட்டல் விடுக்கும் விதமாக பேசியது, பிரதீப் ஆண்டனியை தாக்கியது, விஷ்ணுவிடம் சண்டைக்கு போனது என விஜய் வர்மாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் கடந்த வார எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது நபராக விஜய் வர்மா வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட்டது குறித்து பேசியுள்ளார். அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் “மிரியம்மா..” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தில் நடிகை ரேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத், மாலதி நாராயணன் என பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார். ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நான் நினைக்கவில்லை:
இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் வர்மா, “நட்பின் அடிப்படையில் தான் பிக்பாஸ் நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பேசினார்.
முன்னதாக நடிகை ரேகா பேசும்போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.
கதையை கேட்கும்போதே பட்டாம்பூச்சி:
தமிழில் ஜெனிபர் டீச்சர், ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன். செல்போனில் இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது. இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான். பின்னர் நான் அவனை “டேய் இங்க வாடா” என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகி விட்டான்.
உண்மையில் அப்படியில்லை:
நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை. என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.
நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்ஸியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன். நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.