கண் கொள்ளா காட்சி கிருஷ்ணா!! கிருஷ்ணா!! ஆனந்தத்தில் பக்தர்கள்..!
தர்மபுரி பிருந்தாவனத்தில் ராதே கிருஷ்ணா ஆலயத்தில் காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்த மக்கள்.
கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு
தருமபுரி அருகே உள்ள பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மா கோலமும் மாவிலை தோரணமும்
நாடெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. முதல் நாளே மாக்கோலம் இட்டு வாசலிலே மாவிலை தோரணம் கட்டி வாசலில் கிருஷ்ணனின் பாதங்கள் வரைந்து மஞ்சள் குங்குமம் இட்டு வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணன், ராதை வேடம் சூட்டி வாசலில் இருந்து அழைத்து வருவது வழக்கம்.
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்கள்
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்கள் முறுக்கு, சீடை, எள்ளுருண்டை, கள்ள உருண்டை, வெண்ணெய், தயிர், மோர், பழங்கள், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் என கலவை சாதங்களை செய்து கிருஷ்ணருக்கு படையல் வைத்து கிருஷ்ணரை வணங்குவர். பின்னர் அருகில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு சென்று கிருஷ்ணர் துதி பாடி கிருஷ்ணரை தரிசனம் செய்வார்கள்.
இந்த ராதே கிருஷ்ணா ஆலயத்திற்கு வெளி மநிலங்களில் இருந்து குவியும் பக்தர்கள்
அந்த வகையில் தருமபுரி அருகே ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள பிருந்தாவனத்தில் எழுந்தருளிவுள்ள ராதே கிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ராதே கிருஷ்ணா ஆலயத்திற்கு சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிகாலை ஆறு மணியிலிருந்து பக்தர்கள் கூட்டம்
முன்னதாக அதிகாலை ராதே கிருஷ்ணருக்கு அபிஷேகங்கள் செய்து வண்ண வண்ண மலர்களால் அலங்காரங்கள் செய்து ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் ராதே கிருஷ்ணர் இருவரும் பக்தர்களுக்கு அருள் அருள் பாலித்தனர்.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று ராதே கிருஷ்ணரை வணங்கி வழிபட்டனர். காலை 6 மணி முதலே ஏராளமான பக்தர்கள் ராதே கிருஷ்ணரை தரிசிக்க ராதே கிருஷ்ணர் ஆலயத்தில் குவிந்தனர். வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கி பின்னர் அன்னதானமும் வழங்கினர்.
கிருஷ்ணா!! கிருஷ்ணா!! வரம் கொடு கிருஷ்ணா பக்தர்கள் பரவசம்
இந்த ராதே கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று வழிபட்டால் குழந்தை பலன், தானிய விருத்தி, நோய் நொடி நீங்குதல், நீண்ட ஆயுள், நல்ல படிப்பு, திருமணம் ஆகிய அனைத்து பிரார்த்தனைகளும் கைகூடும் என்பது ஐதீகம், எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து நீண்ட வரிசையில் நின்று ராதே கிருஷ்ணரை வணங்கி செல்கின்றனர்.