Krishna Jayanthi 2024: கோலாகலமாக தொடங்கியது கிருஷ்ண ஜெயந்தி! ராதை, கிருஷ்ணர் அவதாரம் எடுத்த குழந்தைகள்!
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற்றோர்கள் அழகு பார்க்கின்றனர்.
திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது கிருஷ்ணர் அவதாரம். ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாக இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி:
கிருஷ்ண ஜெயந்தி வருவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே வைணவத் தலங்கள் களைகட்டி காணப்பபட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்று புராணங்கள் கூறுவதால் மாலை நேரத்தில் வீடுகளில் பூஜை செய்வது வழக்கம்.
கோயில்களிலும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட பல பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதேபோல இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதியிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம்:
இந்த நன்னாளில் வீடுகளில் கிருஷ்ணர் வாசம் செய்ய வேண்டும் என்பதற்காக அரிசி மாவில் குழந்தைகளின் பாதங்களை பதிய வைத்து அவர்களை வீட்டில் நடக்க வைப்பார்கள். இவ்வாறு செய்வதால் வீட்டில் கிருஷ்ணர் துள்ளி விளையாடியதாக கருதப்படும். அதேபோல, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் அழகு பார்ப்பார்கள். பள்ளிகளில் இன்று கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
கிருஷ்ண ஜெயந்ததியான இன்று முருகனுக்கு உகந்த கிருத்திகை ஆகும். கிருஷ்ண ஜெயந்தியும், கிருத்திகையும் இணைந்து வருவது மிகமிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், சிவ பெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது மேலும் சிறப்பாகும். கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி இன்று என்பதால் இந்த நாளில் பைரவரை வணங்கினால் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகலாம் என்பதும் ஐதீகம் ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கடைகளில் பூக்கள், பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும், பலரும் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வத்துடன் வழிபடுவதற்காக வாங்கிச் செல்கின்றனர்.