Krishna Jayanthi 2024 Date: கோவிந்தா! கோவிந்தா! கிருஷ்ண ஜெயந்தி எப்போது? புராணங்கள் சொல்வது இதுதான்!
Krishna Jayanthi 2024 Date in Tamil: இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? எந்த நேரத்தில் கொண்டாட வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
திருமாலின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரமாக கிருஷ்ணர் அவதாரம் உள்ளது. கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி எப்போது? (Krishna Jayanthi 2024 Date )
நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் ஆகஸ்ட் 26ம் தேதி( திங்கள் கிழமை) வருகிறது. ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 26ம் தேதி காலை 9.13 மணி முதல் அடுத்த நாளான ஆகஸ்ட் 27ம் தேதி காலை 7.30 மணி வரை அஷ்டமி திதி வருகிறது. ரோகிணி நட்சத்திரம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 9.41 மணிக்கு தொடங்கி அடுத்த நாளான 27ம் தேதி இரவு 8.54 மணி வரை வருகிறது. அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆகஸ்ட் 26ம் தேதியே இணைந்து வருவதால் அன்றைய தினமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மற்ற பெயர்கள்:
புராணங்களும் கிருஷ்ண பெருமான் ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தாக கூறுகின்றன. கிருஷ்ண பெருமான் இரவு நேரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுவதால் கிருஷ்ண ஜெயந்தி எப்போதும் மாலை நேரங்களில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று மட்டுமின்றி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, அஷ்டமி ரோகிணி என பல பெயர்களில் அழைக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிருத்திகை:
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் அதே ஆகஸ்ட் 26ம் தேதி கிருத்திகையும் வருகிறது. முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை தினமும் கிருஷ்ண ஜெயந்தியும் இணைந்து வருவது கூடுதல் சிறப்பு ஆகும். இன்றைய தினத்தில் கிருஷ்ணர் மற்றும் முருகப்பெருமான் இருவரையும் அன்றைய தினத்தில் வழிபடுவதால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்து, அவர்களை வீடுகளில் நடக்க வைப்பதால் தங்களது வீடுகளில் கிருஷ்ணரே உலாவுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.