Aavani 2024: பக்தர்களே! அபூர்வ பிரதோஷத்தில் பிறக்கும் ஆவணி - எப்போது? இத்தனை சிறப்புகளா?
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்றான ஆவணி மாதம் இந்த வருடம் அபூர்வ பிரதோஷத்தில் பிறக்கிறது. அதன் முழு விவரங்களை கீழே காணலாம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் முடிய இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. ஆடி மாதத்திற்கு நிறகு ஆவணி மாதம் பிறக்க உள்ளது. ஆடி மாதத்தைப் போலவே ஆவணி மாதமும் ஏராளமான நன்மைகளை கொண்ட மாதம் ஆகும்.
ஆவணி மாதம் எப்போது?
ஆடி மாதம் வரும் ஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், ஆவணி மாதம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி பிறக்கிறது. சனிக்கிழமை நாளில் இந்த வருடத்திற்கான ஆவணி மாதம் பிறக்கிறது. இந்த வருடத்திற்கான ஆவணி மாதம் பிரதோஷ நன்னாளில் பிறக்கிறது. இது கூடுதல் சிறப்பாகும். இந்த பிரதோஷமானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷ நன்னாள் ஆகும்.
பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு முறை மட்டுமே பிரதோஷம் வரும். ஆனால். இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 பிரதோஷம் வருகிறது. அதில் வரும் சனி பிரதோஷத்தில் ஆவணி மாதம் பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 17ம் தேதி பிறக்கும் ஆவணி மாதமானது வரும் செப்டம்பர் மாதம் 16ம் தேதி வரை நடக்கிறது.
ஆவணி ஏன் இத்தனை சிறப்பு?
தமிழ் மாதங்களில் வரும் 5வது மாதம் இந்த ஆவணி மாதம் ஆகும். ஆவணி மாதம் ஏராளமான சிறப்புகளை உள்ளடக்கிய மாதமாகவே ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. ஆவணி மாதமானது முழு முதற்கடவுளாக போற்றப்படம் விநாயகப் பெருமானுக்கும், திருமாலுக்கும் மிக மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில்தான் சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் இருந்து பயணிக்கத் தொடங்குவார். இதை சந்திர மாதம் என்றும் கூறுவார்கள். இ்த மாதத்திற்கு சிங்க மாதம் என்றும், மாதங்களின் அரசன் என்றும் சிறப்புகள் உண்டு. கேரளாவின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை இந்த மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தில்தான் திருமால் வாமன அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. மேலும், இந்த ஆவணி மாதத்தில்தான் புகழ்பெற்ற விழாக்களான விநாயகர் சதுர்த்தி, ஓணம், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைகள் வருகிறது. நடப்பாண்டிலும் இதே ஆவணி மாதத்தில்தான் இந்த பண்டிகைகள் வருகிறது. இதுமட்டுமின்றி ஆவணி மாதத்தில் வரும் மகாசங்கடஹர சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி மூலம், ஆவணி ஏகாதசி போன்றவைகளும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நன்னாட்களில் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.