Aadi Peruku 2025: ஆடிப்பெருக்குக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் ரெடி.. ஜாலியா போங்க
Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Aadi Perukku 2025: தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஆடிப்பெருக்கும் முக்கியமானது ஆகும். நடப்பாண்டில் ஆடிப்பெருக்கு வரும் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு வர உள்ள நிலையில், அதை கொண்டாட புதுமண தம்பதிகளும், மக்களும் தயாராகி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்துகள்:
இந்த நிலையில், ஆடிப்பெருக்கு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசுப்போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக, ஆகஸ்ட் 1ம் தேதியான நாளை சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் புறப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எத்தனை பேருந்துகள்:
வெள்ளிக்கிழமையான நாளை மேற்கண்ட ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல, நாளை மறுநாளான சனிக்கிழமை 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து வெள்ளிக்கிழமையான நாளை மேலே கூறிய ஊர்களுக்கு வழக்கமாக 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று கருதப்படுகிறது. இதனால், அங்கிருந்தும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெளியூர்களுக்கு வெள்ளிக்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு:

இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்னையில் இருந்து வெளியூர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வார இறுதிநாளில் பயணிக்க ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பயணிக்க 6 ஆயிரத்து 224 பயணிகளும், சனிக்கிழமை பயணிக்க 2 ஆயிரத்து 892 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை பயணிக்க 6 ஆயிரத்து 695 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழகம் எதிர்பார்க்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மற்றும் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலியிலும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளிலும் முன்பதிவு நிரம்பி வருகிறது.





















