Aadi Month 2024: ஆடி மாதம்! வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? புராணங்கள் சொல்வது இதுதான்!
ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கிவிடும். அம்மன் வழிபாட்டிற்கும், வேப்பமரத்திற்கும் என்ன தொடர்பு? என்பதை கீழே காணலாம்.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஆன்மீகத்திற்கு மிகவும் உகந்த மாதமாக உள்ளது. அந்த வகையில், தமிழ் மாதங்களிலே மாதத்தின் அனைத்து நாட்களும் சிறப்பு வாய்ந்த நாட்களாக அமைந்துள்ள மாதம் ஆடி மாதம் ஆகும்.
சக்திக்குள் ஐக்கியமாக சிவன்:
ஆடி மாதம் பிறந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்கள் களைகட்டத் தொடங்கிவிடும். அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமான ஆடி மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
ஆடி மாதத்தைப் பொறுத்தவரை சிவபெருமானை விட பார்வதி தேவிக்கே சக்தி அதிகம் என்று கூறுவார்கள். அதற்கான காரணம் என்னவென்றால், பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அவ்வாறு பார்வதி தேவி இருந்த தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவருக்கு வரம் தந்து அவருள் ஐக்கியம் ஆகினார். அது இந்த ஆடி மாதம் நிகழ்ந்த காரணத்தால், ஆடி மாதத்தைப் பொறுத்தமட்டில் சிவத்தை காட்டிலும் சக்தியே சக்திவாய்ந்தவராக திகழ்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது.
கசப்பு மரம்:
இது மட்டுமின்றி, ஆடி மாதம் பிறந்ததற்கான காரணத்திற்கும், அம்மனுக்குமே தொடர்பு உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. ஆடி என்ற தேவகுல சர்ப்பம் பார்வதி தேவி இல்லாத தருணத்தில், அவரது வேடம் தரித்து சிவபெருமான் அருகில் சென்றது. அப்போது, அந்த ஆடி பாம்பின் கசப்புத் தன்மையை உணர்ந்த சிவபெருமான் அது பார்வதி தேவி இல்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து, தனது சூலாயுதத்தால் அதை அழிக்க முயன்றபோது சூலாயுதத்தில் இருந்து வந்த தீப்பொறி பார்வதி தேவி வேடத்தில் இருந்த ஆடி மீது பட்டு, ஆடியை சுத்தம் அடையச் செய்தது.
மேலும், அப்போது ஆடி சிவபெருமானின் கடைக்கண் பார்வை தன்மேல் பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாகவும், தன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அப்போது, சிவபெருமான் பார்வதி தேவி இல்லாத நேரத்தில் அவரது வேடத்தில் வந்ததால் பூமியில் கசப்புள்ள மரமாக பிறப்பாய் என்று சாபம் தந்தார். உடனே, ஆடி ஈசனிடம் மன்னிப்பு கேட்டு விமோசனம் வேண்டும் என்று கேட்டது.
வேப்பமரத்திற்கும், அம்மனுக்கும் என்ன தொடர்பு?
அப்போது, ஆடியின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான் கசப்புள்ள மரமாக நீ இருந்தாலும் ஆதிசக்தியின் அருள் உனக்கு கிட்டும் என்றும், சக்தியை வழிபடுவது போலவே உன்னையும் பக்தர்கள் வழிபடுவார்கள் என்றும், இந்த பூமியில் உன் பெயரில் ஒரு மாதமே கொண்டாடப்படும் என்றும் வரம் தந்தார். அந்த கசப்பு சுவை கொண்ட மரம்தான் வேப்பமரமாக பூமியில் தோன்றியது. வேப்பமரத்தை அம்மனாக நினைத்து வழிபடுவதும் அதன் காரணமே ஆகும். இவ்வாறு புராணங்கள் வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுகின்றன.
மேலும், கிராமப்புறங்களில் அம்மை போடும்போது வேப்பிலையில் படுக்கை வைப்பதும், வேப்பிலை கலந்த நீரில் குளிக்க வைப்பதும் இதன் காரணமே என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. இதுதவிர வேப்பமரமானது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். அதன் பூ, இலை என ஒவ்வொன்றும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.