Meta layoff: 11,000 பேரின் வேலையை பறித்த மெட்டா நிறுவனம்.. பாதுகாப்புக்கு இத்தனை கோடிகளா?
பொருளாதார நெருக்கடியால் ஆயிரகணக்கானோரை வேலையை விட்டு நீக்கிய மெட்டா நிறுவனம், அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்ஸின் பாதுகாப்பிற்காக பல கோடிகளை ஒதுக்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் செலவினங்களை குறைக்கும் நோக்கில், ஆயிரகணக்கானோரை வேலையை விட்டு நீக்கிய மெட்டா நிறுவனம், அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்ஸின் பாதுகாப்பிற்காக பல கோடிகளை ஒதுக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்கம்:
உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மெட்டா நிறுவனம் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே அடியாக 11 ஆயிரம் பேரை அதாவது உலகளவில் உள்ள தனது மொத்த ஊழியர்களில் 13 சதவிகிதம் பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அதோடு புதிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதோடு, பல பிரிவுகளுக்கு நடப்பாண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதால், பணிநீக்க நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்கின் பாதுகாப்பு செலவுகள்:
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகரியான மார்க் ஜுக்கர்பெர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான, நடப்பாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவுகளுக்கு மட்டும், 14 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 115 கோடி ரூபாயை அந்த குழுமம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக இந்த தொகை 4 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் மட்டுமே. தற்போது அந்த தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது ஜுக்கர்பெர்க்கின் தற்போதைய ஒட்டுமொத்த பாதுகாப்பு திட்டத்தின் செலவுகளுடன், சூழ்நிலைகளின் கீழ் பொருத்தமானது மற்றும் அவசியமானது" என்று மெட்டா விளக்கமளித்துள்ளது.
எதிர்ப்பு:
அநாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்த மெட்டா நிறுவனம், தற்போது தலைமை செயல் அதிகாரியின் பாதுகாப்பு செலவுகளை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பணிநீக்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதள்ங்களில் தங்களது வேதனையை பதிவு செய்து வருகின்றனர்.
மார்க்-கின் சம்பள விவரம்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதள செயலிகளில், ஏதேனும் ஒன்றையாவது பயன்படுத்தாமல் உலகில் இருப்பவர்கள் மிகவும் அரிது. இதனால், தான் அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பல கோடிகளை வருவாயாக குவித்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான 38 வயதான மார்க் ஜுக்கர்பெர்க்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு அவர் ஊதியமாக மட்டும் இந்திய மதிப்பில், ரூ.223 கோடியை பெற்றுள்ளார். கடந்த ஆண்டிற்கான அவரது ஊதிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலையில் அவரது சொத்து மதிப்பு 63.6 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 5.25 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.