
"நீங்களா சொல்ற வரை" மூன்றாவது முறையாக அதிபராக பிளான்.. அமெரிக்க அரசியலை புரட்டி போட்ட டிரம்ப்!
வரும் 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் சூசகமாக பேசி இருப்பது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப், வரும் 2028ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக களமிறங்குவது குறித்து சூசகமாக பேசியுள்ளார்.
டிரம்ப் போடும் மெகா பிளான்:
ஆனால், அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்கா அரசியலை புரட்டி போடும் அளவுக்கு அவர் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் களம் கண்டனர்.
இதில், டிரம்ப் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். குறிப்பாக, வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன், அரிசோனா, நெவாடா ஆகிய மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றினார். கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சி அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
தலைகீழாக மாறும் அமெரிக்க அரசியல்:
இந்த நிலையில், வரும் 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் சூசகமாக பேசி இருப்பது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட குடியரசு கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசுகையில், "இவர் (டிரம்ப்) நல்லவர், நாம் எதாவது செய்ய வேண்டும் என நீங்களாக (ஆதரவாளர்கள்) சொல்லும் வரை நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சந்தேகம்தான்" என்றார்.
அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத் திருத்தத்தின்படி, ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். எனவே, டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக விரும்பினால், முதலில் அவர் அந்த திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வது கடினமான விஷயம். ஏனெனில், இதற்கு அமெரிக்க நாடாளுமன்றம்0 மற்றும் மாகாண சட்டமன்றங்களில் இருந்து அதிக அளவிலான ஆதரவை அதிபர் பெற வேண்டும். இது, டிரம்ப்பால் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
இதையும் படிக்க: Vivek Ramaswamy : “இந்தியரான விவேக் ராமசாமிக்கு அமெரிக்காவில் புதிய பொறுப்பு” அறிவித்தார் அதிபர் ட்ரம்ப்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

