Heart Transplant from Pig: மனிதருக்கு பன்றியின் இருதயம் பொருத்திய மருத்துவர்கள்..! உலகிலேயே முதல் முறையாக சாதனை! அது எப்படி சாத்தியம்?
மனிதர் ஒருவருக்கு பன்றியின் இதயத்தை வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாளுக்கு நாள் உடல் உறுப்பு மாற்று அறுவகை சிகிச்சை பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில் தற்போது ஒரு புதிய வகை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அது என்ன? எப்படி நடந்தது?
அமெரிக்காவின் சிகாகோ பகுதியைச் சேர்ந்த டேவிட் பென்னட்(57) கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் இதற்காக பல முறை சிகிச்சை எடுத்தும் குணம் அடையவில்லை. இவரை சமீபத்தில் பரிசோதித்த மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இவருக்கு பன்றியின் இதயத்தை வைத்து அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக விர்ஜினியாவிலிருக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து பன்றியின் இதயத்தை வாங்கி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் தற்போது தேறி வருகிறார். அவருடைய உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பன்றியின் சில உடல் உறுப்புகள் கிட்டதட்ட மனிதர்களின் உடல் உறுப்புகள் போல் இருக்கும். எனினும் இதற்கு முன்பாக இந்த உடல் உறுப்பை மாற்றி அறுவை சிகிச்சை செய்யும் போது மனிதர்களின் உடம்பு அதை ஏற்காத நிலை இருந்தது. இதை தவிர்க்க பன்றியின் உடலில் சில மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பன்றியின் மரபணுவில் சில வற்றை ஜீன் எடிட்டிங் செய்து மனிதர்களின் மரபணு சிலவற்றை சேர்த்துள்ளனர். இதனால் பன்றியை உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு வைக்கும் போது அதை உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு மரபணு மாற்றிய பிறகு நடைபெறும் முதல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இது என்பதால் இது அதிக கவனத்தை பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி மருத்துவ உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலகம் முழுவதும் பல்வேறு நபர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த முறை அறுவை சிகிச்சை பெரும் பயனை அளிக்கும். மேலும் பன்றியின் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய இரண்டையும் மனிதர்களுக்கு வைக்கும் அறுவை சிகிச்சை தொடர்பாகவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதுவும் வெற்றி அடையும் பட்சத்தில் அதுவும் மருத்துவ துறையில் பெரிய மையில் கல்லாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தோழி இல்லையே மொமெண்ட்... பெண் ரோபோவை கரம்பிடிக்க இருக்கும் நபர்..காதலுக்கு இனி உயிரும் வேண்டாமா?