சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
" சென்னை தாம்பரம் பெருங்களத்தூர் அருகே சிவகார்த்திகேயன் திரைப்படம் சூட்டிங் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது"
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தீபாவளி முன்னிட்டு அமரன் படம் வெளியாகி திரையரங்குகளில், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் சினிமா சூட்டிங் வைப்பது அரிதான ஒன்றாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்று தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் பாலத்திலிருந்து உதிப்பது போல் பட காட்சி எடுப்பதற்கான காவல்துறை அனுமதி வாங்கி திரைப்படம் ஷூட்டிங் நடைபெறுகின்றது.
கடும் போக்குவரத்து நெரிசல்
படக்காட்சிக்காக மேம்பாலத்தை திடீரென போலீசார் முன்னறிவிப்பு இன்றி மூடியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த பேருந்து நிறுத்தம் சர்வீஸ் சாலையும் மூடப்பட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் மேம்பாலத்திலிருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சியை படம் பிடித்து, வருவதால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை காண குவிந்தனர். காவல்துறையினர் அவர்களை ஒருபுறம் கட்டுப்படுத்தினர்.
மறுபுறம் பெருங்களத்தூர், வண்டலூர், ஆலப்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஷூட்டிங் என்பதால் ஆர்வத்துடன் வாகன ஓட்டிகள் நின்று வேடிக்கை பார்த்து வருவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசல் ஆட்சிக்கு தவித்து வரும் நிலையில், காவல்துறை ஏன் முன்னறிவிப்பின்றி இந்த இடத்தில் சூட்டிங் வைக்க அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவல்துறை அனுமதி கொடுக்கக் கூடாது
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்கள். சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள இடங்களில் இது போன்ற சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் திடீரென சினிமா படம் எடுப்பதற்காக அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால் தேவையில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே வருங்காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினர் அனுமதி கொடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.