ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்: இலங்கை விவகாரம் தொடர்பான வரைவு தீர்மானம்: இந்தியாவின் நிலைபாடு என்ன?
47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக வரைவு தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக வரைவு தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதாரவாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.
UNHRC passes resolution on Sri Lanka with 20 votes in favour, 7 against and 20 abstentions.
— Marlon Ariyasinghe (@exfrotezter) October 6, 2022
Interesting to look at the ones who abstained and the ones who voted against.#SriLanka pic.twitter.com/qbW8C4DJQM
எதிர்பார்த்தபடியே, இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. தீர்மானத்திற்கு எதிராக சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவுபெற்ற உள்நாட்டு போரின்போதும் அதற்கு பிறகும் நிகழ்ந்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மையை வெளி கொண்டு வரவும் அதற்கு நீதி பெற்று தரும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்களே இந்த வரைவிலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் கீழ், எதிர்காலத்தில் போர் குற்ற வழக்குகளை விசாரிக்க மத்திய சர்வதேச தரவுத்தளத்தை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. போர் குற்றம் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணை அலுவலர்களை பணியமர்த்த 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதற்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ள வரைவு தீர்மானம் திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அதில், போர் குற்றம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், அதை ஒருங்கிணைத்தல், ஆய்வு செய்தல், பாதுகாக்கும் அதிகாரத்தை ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு வழங்கி வலு சேர்த்துள்ளது.
எதிர்காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கடுமையான மீறல்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான செயல்முறை உத்திகளை வகுக்கவும், போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக ஆதரவாக வாதிடவும், உறுப்பு நாடுகளில் தகுதிவாய்ந்த அதிகார வரம்பின் கீழ் நீதித்துறை மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படவும் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகளின் தாக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வரைவுத் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்தை கேட்டு கொண்டுள்ளது.
2025ல் நடைபெறும் கவுன்சிலின் 57வது அமர்வில் விரிவான அறிக்கையுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாய்வழி முன்னேற்றங்களை ஐநா மனித உரிமைகள் தலைவர் வெளியிட வேண்டும் என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அரசுக்கு இந்த தீர்மானம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இம்மாதிரியான சூழலில், சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை என இலங்கை அரசு தெரிவித்து வருகிறது. ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்படுவது இதுவே முதல்முறை.
கடந்த 2021ஆம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.