Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Britain Election 2024: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
Britain Election 2024: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் வென்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் பிரதமர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்:
இங்கிலாந்தில் 650 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கான தேர்தலில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிரது. கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இந்த முறை அங்கு ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும், தொழிற்கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால், கருத்து கணிப்புகளின் படி எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்குமா அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் இங்கிலாந்து பிரதமராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 4.9 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவு நாளின் இரவே இங்கிலாந்தில் அறிவிக்கப்பட உள்ளது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியபிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இதுவாகும்.
ரிஷி சுனக் Vs கெய்ர் ஸ்டார்மர்
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவரான கெய்ர் ஸ்டார்மர் அகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் நாடு முழுவதும் பயணித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது 44 வயதான ரிஷி சுனக் பேசுகையில், “ தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரி உயர்வு மற்றும் பலவீனமான தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதேநேரம், “ரிஷி சுனக் சொல்வதெல்லாம் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்கான அவநம்பிக்கையான முயற்சிகள் மட்டுமே” என 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியணை யாருக்கு? ஆட்சி மாற்றமா?
இங்கிலாந்து தேர்தல் தொடர்பான கருத்துகணிப்புகள் பெரும்பாலும், ஆளுங்கட்சி தோல்வியை சந்திக்கும் என்றே தெரிவித்துள்ளன. 2010 ல் கார்டன் பிரவுன் பதவியில் இருந்து விலகிய பிறகு, தொழிலாளர் கட்சியை சேர்ந்த முதல் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் வெற்றி பெறுவார் என்று, தேர்தல் வெற்றியாளர்களை துல்லியமாக கணிப்பதில் பிரபலமான சன் டேப்லாய்டு தெரிவித்துள்ளது. அரசின் சிக்கனம், பிரெக்ஸிட் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி போன்றவை, ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் மற்றும் விதிமீறல் குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. கடந்த 14 ஆண்டு கால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் டேவிட் கேமரூன், தெரெசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் என 5 பேர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
களத்தில் 8 தமிழர்கள்:
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த முறை தமிழக வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அதன்படி, உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி மற்றும் ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.