Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை, சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்காவிட்டால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து மாபெரும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

காசாவில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யாத பட்சத்தில், மீண்டும் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓராண்டுக்கு மேல் நீடித்த போர்
கடந்த 2023 அக்டோபர் மாதத்தில், இஸ்ரேல் எல்லையை தாண்டி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாத அமைப்பு என இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வகையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரினால், காசா பகுதியில் சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஓராண்டுக்கு மேல் நீடித்த போரால், அங்கிருந்து லட்சக்கணக்கானோர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அப்பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டு, உணவு, உறைவிடம், மருந்து, எரிபொருள் உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்
இந்த நிலையில், அமெரிக்கா, கத்தார், எகிப்து தலைமையில் நடந்த பேர்ச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பல கட்டங்களாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,
- முதற்கட்டமாக 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
- பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 33 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்து வருகிறது.
- சுமார் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.
இரண்டாம் கட்டத்தில்,
- பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் கூடுதலாக விடுவிக்கும்.
- ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பார்கள்.
- காசாவிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும்.
பிணைக் கைதிகளை விடுவிப்பதை நிறுத்திய ஹமாஸ்
இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், மனிதாபிமான உதவிகளை தடுப்பதாகவும் கூறி, பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இதையடுத்து, அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டது.
கெடு விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இப்படிப்பட்ட சூழலில் நேற்று பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள், மீதமுள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். அப்படி செய்யாவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, முன்பைவிட மிகப் பெரிய தாக்குதலை ஹமாஸ் சந்திக்கும் என்றும், நரகத்தை போன்ற நிலை அங்கு உருவாகும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்று ட்ரம்ப் பேசியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பு தற்போது என்ன செய்யப்போகிறது என உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

