Tropical Elsa Storm : அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல் : வெள்ளத்தில் மிதக்கும் புளோரிடா..!
அமெரிக்காவில் எல்சா புயல் தாக்கிய காரணத்தால் அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 2-ந் தேதி புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு “எல்சா” புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த 5-ந் தேதி கியூபாவை தாக்கியது. அங்கு பெரியளவில் எல்சா புயலால் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எல்சா புயல் அமெரிக்காவில் கரையை கடக்கும் என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள டைலர் கவுண்டி பகுதியில் எல்சா புயல் நேற்று கரையை கடந்தது.
எல்சா புயல் கரையை கடந்ததன் காரணமாக புளோரிடா மாகாணத்தில் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால், மாகாணத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளங்கள் அந்த பகுதிகளைச் சூழ்ந்துகொண்டது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், எல்சா புயல் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் இருப்பவர்களுக்கு தேவையான உணவுப்பொருள், மருந்து பொருட்களை அந்த நாட்டு மீட்புக்குழுவினர் அளித்து வருகின்றனர். மேலும், அவர்களை மீட்கும் பணியையும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் எல்சா புயல் காரணமாக மின் விநியோகத்திற்கான பணிகள் பழுதடைந்துள்ளதால், அதை புளோரிடா மாகாண மின்வாரிய பணியாளர்கள் சரிசெய்து வருகின்றனர்.
இந்த சூழலில், புளோரிடாவில் பெரும் சேதத்தை விளைவித்த எல்சா புயல் படிப்படியாக வலுவிழந்தது. பின்னர் மணிக்கு 50 கி.மீ. என்ற வேகத்தில் ஜார்ஜியா மாகாணாத்தை கடந்து சென்றது. ஜார்ஜியாவில் 45 கி.மீ. வேகத்தில் எல்சா புயல் வீசியுள்ளது. இதன் காரணமாக ஜார்ஜியா மாகாணம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து எல்சா புயல் அருகில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எல்சா புயல் காரணமாக புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்சா புயலில் சிக்கியதால் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதன் காரணமாக அந்த வேனின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அந்த வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்சா புயல் காரணமாக ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களில் ஆங்காங்கே சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.