இலங்கையில் இறுதி கட்டத்தில் அதிபர் தேர்தல்..போட்டியிலிருந்து விலகிய சஜித் - அடுத்து என்ன?
இலங்கையில் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விலகி உள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விலகி உள்ளார். மேலும், ராஜபக்ச கட்சி சார்பாக போட்டியிடும் துலாஸ் அலகபெருமவுக்கு அவர் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், "நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் வாபஸ் பெறுகிறேன். Samagi Jana Balawegaya கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மற்ற எதிர்கட்சிகளும் இணைந்து துலாஸ் அலகபெருமவின் வெற்றிக்காக போராடும்" என பதிவிட்டுள்ளார்.
For the greater good of my country that I love and the people I cherish I hereby withdraw my candidacy for the position of President. @sjbsrilanka and our alliance and our opposition partners will work hard towards making @DullasOfficial victorious.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 19, 2022
கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலக நேர்ந்தது.
விரைவில் அதிபர் தேர்தல்
மக்கள் போராட்டம் இலங்கையில் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோட்டபய ராஜபட்ச, அதிபா் பதவியை ஜூலை.14ஆம் தேதி ராஜினாமா செய்தாா். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் ஜூலை 15ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக அன்றே பதவியேற்றாா்.
வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரா குமாரதிசநாயக மற்றும் டல்லஸ் அல்லபெரும உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.
அனைத்துக் கட்சி அரசு
இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைத்துக் கட்சி அரசு அமைக்கலாம் என்றும், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் பிற கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், இரண்டு ஏக்கர்களுக்கும் குறைவான நிலத்துக்கு பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு பேசிய ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்குத் தேவை ஒரே ஒரு தேசியக்கொடி மட்டுமே என்றும், ஜனாதிபதிக்கு என தனிக் கொடி தேவையில்லை என்றும், ஜனாதிபதி பதவியில் இருப்பவரை அதிமேதகு என அழைக்க தேவையில்லை எனவும் தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்