Russia Nuclear Missile Test: உக்ரைனை தட்டித் தூக்க தயாரான ரஷ்யா; அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி; புதினின் பிளான் என்ன.?
ரஷ்யா-உக்ரைன் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், அணு ஆயுத ஏவுகணை ஒன்றை வெற்றகரமாக சோதித்துள்ளது ரஷ்யா. இதை புதினே அறிவித்துள்ள நிலையில், அவரது பிளான் என்ன என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலா தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் அணு ஆயுதப்படைகளை பார்வையிட்ட புதின், தற்போது அணு ஆயுத ஏவுகணை ஒன்றை ரஷ்யா வெற்றிகரமான சோதித்துள்ளதாக அறிவித்துள்ளார். 14,000 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணையை சோதித்துள்ளதன் மூலம், புதினின் பிளான் என்ன என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
அணு ஆயுத ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கை வெற்றிகரமாக சோதித்த ரஷ்யா
3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துவரும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்பட பல உலகத் தலைவர்கள் முயன்றும், எந்த பலனும் இல்லை. போரை தொடர்வதில் புதின உறுதியாக இருக்கிறார். அமெரிக்காவில் ட்ரம்ப்-புதின் சந்திப்பு நடந்தும் கூட, போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அணுசக்தி மூலம் இயங்கும் ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையான இது, 14,000 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரம் தொடர்ச்சியாக பறந்து கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புத்துறை தளபதி மற்றும் ராணுவ கமாண்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய புதின், புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பதில் அச்சுறுத்தல்
இந்த அணுசக்தி ஏவுகணை சோதனையை, உக்ரைன் மற்றும் அமெரிக்காவிற்கான பதில் அச்சுறுத்தலாகவே ரஷ்யா நடத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
ஏனென்றால், நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை படைத்த டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரி வருகிறது. அந்த ஏவுகணைகள் மூலம் தாங்கள் தாக்கப்பட்டால், பதிலடி பலமாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், சில நாட்களுக்கு முன், ரஷ்ய அணு ஆயுதப்படைகளின் ஒத்திகையை பார்வையிட்டார் புதின்.
இந்நிலையில் தான், உக்ரைன் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் இந்த அணுசக்தி ஏவுகணை சோதனையை ரஷ்ய மேற்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
புரேவெஸ்ட்னிக் ஏவுகணையின் சக்தி என்ன.?
ரஷ்யா தற்போது சோதித்துள்ள புரேவெஸ்ட்னிக் ஏவுகணைகள், அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கும் ஒரு ஏவுகணையாகும். இதன் அணுசக்தி உந்துவிசை, வழக்கமான எஞ்சின்களைவிட நீண்ட தூரமும், நீண்ட நேரமும் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் கவலை இல்லாமல், இலக்கை அடையும் வரை நீண்ட நேரம் இதனால் வானில் சுற்றித் திரிய முடியும். இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, குறைந்த உயரத்தில் நிலப்பரப்பை கடந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது. இது, 50 முதல் 100 மீட்டர் உயரத்தில் பறப்பதால், வான் பாதுகாப்பு ரேடார்கள் இதை கண்டறிவது கடினம் என கூறப்படுகிறது.
புரேவெஸ்ட்னிக் ஏவுகணையால் 20,000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையால் பல நாட்கள் வானில் சுற்றிக்கொண்டே இருக்க முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான நியூக்ளியர் ட்ரெட் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் சொல்லியும் கேட்காமல், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அணு ஆயுதத்தை ஏவி போரை மொத்தமாக முடிக்க புதின் தற்போது திட்டமிட்டுள்ளாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், ரஷ்யா-உக்ரைன் போரில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.





















