AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
நமது கலையை நாம் மதிக்கும் விதம் ஹாலிவுட் கலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனென்றால் அவர்கள் முழு உலகத்தையும் பார்க்க வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுப்படுத்தினார்.

ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கான இசையை உருவாக்கியது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் ஒன்றில் தகவல்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ச்சியாக இந்திய சினிமாவில் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தனது தோற்றத்தை மாற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். இப்படியான நிலையில், “ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின்போது,2008ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற படமான ஸ்லம்டாக் மில்லியனர் உங்களின் சிறந்த படைப்பு அல்ல என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், “இல்லை, நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அது எனது சிறந்த படைப்பு. ஏனென்றால் நீங்கள் ஹாலிவுட்டைப் பார்த்தால், நான் செய்த அந்த ஒலிக்காட்சி அங்கு இல்லை. எனவே மேற்கத்திய மக்களுக்கு, அது எனது சிறந்த படைப்பு. அந்த இசை அற்புதமானது. அதற்கு வாக்களிக்க அவர்கள் முட்டாள்கள் அல்ல” என தெரிவித்தார் .
தொடர்ந்து பேசியபோது, நமது கலையை நாம் மதிக்கும் விதம் ஹாலிவுட் கலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனென்றால் அவர்கள் முழு உலகத்தையும் பார்க்க வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுப்படுத்தினார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படம்
கடந்த 2008ம் ஆண்டு ஹாலிவுட்டில் ஸ்லம்டாக் மில்லியனர் படம் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில், இப்படம் முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட்டிருந்தது. டேனி பாயில் இயக்கிய நிலையில் ஸ்லம்டாக் மில்லியனர் படம் உலகளவில் பேசுபொருளாக மாறியது. இந்த படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது.
இதில் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த பாடல் மற்றும் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இப்படியான நிலையில் அந்த படம் ஏன் தனக்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கிய விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள மௌன நாடகமான காந்தி டாக்ஸ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் . இந்த படம் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் நிதேஷ் திவாரி இயக்கி வரும் ராமாயணம் படத்திற்கும் அவர் இசையமைத்து வருகிறார்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல் மற்றும் யாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் ராமாயணம் படத்திற்கு கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரஹ்மான் பணியாற்றி வருகிறார். இந்த படம் 2026ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















