America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்த ஒரு விஷயத்தால், அந்நாட்டின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்து, அமெரிக்காவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தகப் போரால், அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியடைந்ததையடுத்து, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. அப்படியானால், அது உலக நாடுகளையும் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்க பங்கு விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க பங்குச் சந்தையில், பங்கு விலைகள் இந்த ஆண்டில் இதுவரை காணாத அளவிற்கு குறைந்துள்ளன. இதனால், பங்குச் சந்தைகளில் 4 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் விதித்த வரிகள், அவரின் பொருளாதாரக் கொள்கைகள், வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதால், அது பங்கு விலைகளில் பிரதிபலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பங்கு விலை வீழ்ச்சியின்படி,
- S&P 500 குறியீடு, கடந்த மாதம் 19-ம் தேதி பதிவான உச்சத்திலிருந்து 8.6 சதவீதம் குறைந்துள்ளது.
- Nasdaq - கடந்த ஆண்டு டிசம்பர் மாத உச்சத்திற்குப் பிறகு, இதுவரை 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
- Tesla நிறுவன பங்கு விலைகள் ஒரே நாளில் 125 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சரிந்துள்ளன.
- Apple மற்றும் Nvidia நிறுவன பங்குகள் 5 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளன.
- டெல்டா ஏர்லைன்ஸின் பங்குகள் 14 சதவீதம் சரிந்தன.
பொருளாதார மந்தநிலை ஏற்படுமா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளதாலேயே, பங்கு விலைகள் கடுமையாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் குறித்த கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இது மாற்றம் ஏற்படும் காலம், நாம் பெரிய காரியங்களை செய்துகொண்டிருப்பதால், பொருளாதார மந்தநிலை ஏற்படுமா என்பதை கணிக்க விரும்பவில்லை என ட்ரம்ப் கூறிவிட்டார்.
அவரது இந்த பதில், முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுதான் பங்கு விலைகளில் எதிரொலித்துள்ளதாக தெரிகிறது.
முதலீட்டாளர்கள் தற்போது, பணவீக்க அறிக்கை, பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றை உற்று நோக்கியுள்ளனர். முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும் பட்சத்தில், பங்குச் சந்தைகள் இன்னும் வீழ்ச்சியடையும்.
அமெரிக்க பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், அது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையே உலக நாடுகள் அனைத்து எதிர்நோக்கியுள்ளன.