‛டைட் ஜீன்ஸ் கிடையாது; ஸ்பைக் கூடவே கூடாது’ வடகொரியாவில் அதிபர் கிம் விதித்த தடைகள்!
சிகை அலங்காரத்தில் தலையில் விதவிதமான வண்ணங்களில் சாயம் பூசிக் கொள்வது முல்லெட் எனப்படும் அலங்காரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் விட 215 விதமான சிகை அலங்காரங்கள் தேசம் அங்கீகரித்த அலங்காரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை மட்டும் வடகொரிய ஆண்கள், பெண்கள் பயன்படுத்த வேண்டுமாம்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றாலே கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்ற வார்த்தைகளும் கூடவே நினைவில் வந்து ஒட்டிக்கொள்ளும். இன்னும் ஒருபடி மேலாக அவரின் அரசியல் பாணியை சர்வாதிகாரம் என்றே சர்வதேச அரங்கம் விமர்சிக்கின்றது.
இந்நிலையில் தங்கள் நாட்டு இளைஞர்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரம் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதும் கிம் அதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, அந்நாட்டு இளைஞர்கள் இனி தோலோடு தோலாக ஒட்டிக் கொண்டு காட்சியளிக்கும் ஸ்கின்னி ஜீன்ஸ், கிழிந்த ஜீன்ஸ் அணியக்கூடாது, வாசகங்கள் அடங்கிய டிஷர்ட் அணியக் கூடாது, மூக்கு குத்தக்கூடாது மற்றும் உதட்டில் ஏதும் அணிகலன்கள் அணியக்கூடாது, தலையில் ஸ்பைக் ரக ஹேர்ஸ்டைல் வைக்கக்கூடாது என கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளதாக அண்டை நாடான தென்கொரியாவின் யோனாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்ல சிகை அலங்காரத்தில் தலையில் விதவிதமான வண்ணங்களில் சாயம் பூசிக் கொள்வது முல்லெட் எனப்படும் அலங்காரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் விட 215 விதமான சிகை அலங்காரங்கள் தேசம் அங்கீகரித்த அலங்காரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை மட்டும் வடகொரிய ஆண்கள், பெண்கள் பயன்படுத்த வேண்டுமாம்.
அதிபரின் இந்த நடவடிக்கைகள் பற்றி வடகொரியாவின் தி ரோடோங் சின்முன் என்ற பத்திரிகையில், "ஒரு தேசம் பொருளாதார ரீதியாக, ராணுவம் ரீதியாக எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும் மக்கள் நாட்டின் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாக்காவிட்டால் அந்நாடு ஈரமான சுவர் இடிந்து விழுவதைப் போல் நொறுங்கிவிடும் என்பதற்கு வரலாறு பல நல்ல பாடங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. ஆகையால் முதலாளித்துவ வாழ்க்கை முறை நம்முள் சிறிதளவேனும் நுழைந்தால் நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அதிபர் கிம்மின் பழமைவாதக் கொள்கைகளால் வடகொரியாவில் இன்னும் சராசரிக்கும் கீழான சுகாதார கட்டமைப்பே இருக்கிறது. அங்குள்ள மருத்துவமனைகள் பலவற்றிலும் இன்னும் தண்ணீர், மின்சாரம் வசதிகூட இருப்பதில்லை. கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வடகொரியா இதுவரை தங்கள் நாட்டில் 25986 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் ஆனால் இதுவரை ஒருவருக்குக் கூட தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. வடகொரியா கொரோன க்ளியர் நாடு என்று பெருமை பேசிக் கொள்வதை சர்வதேச சுகாதார அமைப்புகளும் உலக நாடுகளும் சந்தேகக் கண்களுடன் தான் பார்க்கின்றன.
எதை செய்தாலும் அதை சர்சைக்குரியதாக செய்து சிலரின் பாராட்டையும், பலரின் வெறுப்பையும், அதிக பலரின் எதிர்ப்பையும் சம்பாதிப்பது வடகொரிய அதிபரின் தனித்தன்மை. கொரோனா காரணமாக சமீபமாக அவரது நடவடிக்கைகள்வெளியில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அந்நாட்டு யூத்களுக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது.