பிரமிக்க வைக்கும் மரியானா ட்ரென்ச்.. உலகின் ஆழமான அகழி.. ஒரு பார்வை
மரியானா ட்ரென்ச் என்ற பகுதி பல அரிதான (இதுவரை வெளியுலகம் பெரிதும் அறிந்திராத) நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது.
மனிதர்கள் வாழும் இந்த பூமி மூன்றுபுறம் கடலாலும் ஒருபுறம் நிலத்தாலும் ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் தற்போதைக்கு உலகின் ஆழமான பகுதியாக கருதப்படும் மரியானா ட்ரென்ச் என்ற பகுதி பல அரிய (இதுவரை வெளியுலகம் பெரிதும் அறிந்திராத) நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. மரியானா ட்ரென்ச் சுமார் 11034 மீட்டர் ஆழமானது, கடல்மட்டத்தில் இருந்து 11 கிலோமீட்டர் ஆழத்தில் வாழ்வதால் இன்னும் இங்கு வாழும் உயிரினங்கள் குறித்து பெரிய அளவில் தரவுகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. விசித்திரமான அரிதான அந்த உயிரினங்களில் மூன்றினை குறித்து தற்போது பார்க்கலாம்.
ஆங்லர் மீன் :
சுமார் 100 முதல் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது இந்த ஆங்லர் மீன்கள். 'பயோலுமிநெசென்ட்' என்று கூறப்படும் ஒளிரும் தன்மையை கொண்ட சில பூச்சிகளை நம்மில் பலர் பார்த்திருப்போம். அதேபோல ஒளிரும் உடலமைப்பை கொண்டு அதன்முலம் வேட்டையாடும் ஒரு மீன் இனம்தான் இந்த ஆங்லர் மீன்கள். கடலில் பல்லாயிரம் அடிக்கு கீழ் வாழும் இந்த மீன்கள் வேட்டையாடுவதற்காக இதுபோன்று ஒரு ஒளிரும் தன்மையை பரிணாமவளர்ச்சியின் மூலம் பெற்றுள்ளது என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். ஒளிரும் பல நூலிழைகளை உடலில் கொண்டுள்ள இந்த மீன்கள் அதை அசைப்பதின் மூலம் இரைகளை ஈர்த்து வேட்டையாடுகிறது.
டம்போ ஆக்டோபஸ் :
டிஸ்னி நிறுவன கார்டூன் கேரக்டரான 'டம்போ' என்ற யானையின் உருவத்தை கொண்டுள்ளதால் “டம்போ ஆக்டோபஸ்” என்று அழைக்கப்படுகிறது இந்த உயிரினம். இவ்வுலகில் ஒளி ஊடுருவக்கூடிய அளவிலான உடல் அமைப்பை கொண்டுள்ள வெகுசில உயிரினங்களில் ஆக்டோபஸ் இனமுமொன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 20000 அடிக்கு அடியில் வாழக்கூடிய ஒரே ஆக்டோபஸ் இனம் டம்போ ஆக்டோபஸ் தான். விசித்திரமான உருவம் கொண்ட டம்போ ஆக்டோபஸ் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரில்ட் சுறா:
'வாழும் படிமங்கள்' என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது இந்த பிரில்ட் சுறாக்கள். காரணமாக பலநூறு ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி ஏதுமின்று வாழும் சுறாக்களாக இவை கருதப்படுகிறது. மிக மிக குறைந்த அளவில் உயிருடன் உள்ள இந்த வகை சுறாக்கள் சுமார் 4 ஆண்டுகள் வரை தங்களுடைய குட்டிகளை வயிற்றில் சுமக்கும். பொதுவாக கடல் மட்டத்திருந்து 5000 அடி ஆழத்தில் வாழக்கூடிய இந்த சுறாக்களின் பிரதான உணவு கடல் பாம்புகளாம்.
இதுபோன்ற இன்னும் பல வித்தியாசமான பலநூறு உயிரினங்கள் இந்த மரியானா ட்ரென்ச் பகுதியில் வாழ்ந்து வருகின்றது. அவற்றில் சில இன்னும் மனிதனால் பெயரிடப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.