Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக மாற்றுத்திறனாளியான ஜான் மெக்ஃபால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்ய உள்ளார்.

Disabled Astronaut: மாற்றுத்திறனாளியான ஜான் மெக்ஃபால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
விண்வெளிக்கு பறக்கும் முதல் மாற்றுத்திறனாளி:
விண்வெளி ஆராய்ச்சி என்பது பல ஆச்சரியங்களை கொண்டிருப்பதோடு, கண்ணுக்கு தெரியாத பல ஆபத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. பல திட்டமிடல்களுடன் பயணித்த சுனிதா வில்லியம்ஸே எதிர்பாராத விதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி, பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். இதன் காரணமாகவே விண்வெளி பயணத்திற்கான ஆராய்ச்சியாளர்கள் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு, விண்வெளியில் வரக்கூடிய சவால்களை சமாளிக்க ஏதுவாக முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், உலகிலேயே முதல்முறையாக மாற்றுதிறனாளில் ஒருவர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஒப்புதல் பெற்றுள்ளார்.
யார் இந்த ஜான் மெக்ஃபால்:
இங்கிலாந்தைச் சேர்ந்த 43 வயதான ஜான் மெக்ஃபால்,அறுவை சிகிச்சை நிபுணராவார். அதோடு, 19 வயதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு காலை இழந்த முன்னாள் பாராலிம்பிக் வீரரும் ஆவார். கடந்த 2022 ஆம் ஆண்டில் மெக்ஃபாலை தங்களது விண்வெளி வீரர்களுக்கான பட்டியலில் சேர்த்து அறிவித்தது தொடங்கி, செயற்கை உறுப்பு பொருத்தப்பட்ட ஒருவர் விண்வெளிப் பயணத்தன் குழுவில் உறுப்பினராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மதிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு நீண்ட கால ஆராய்ச்சி பணிக்கு மெக்ஃபால் மருத்துவ அனுமதி பெற்றதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.
எப்போது விண்வெளி பயணம்?
இதுதொடர்பான அறிவிப்பில், “இப்போது ஜான் மெக்ஃபால் விண்வெளி நிலையத்திற்கு பறக்க விரும்பும் மற்ற அனைவரையும் போலவே ஒரு விண்வெளி வீரர், அவருக்கான பணியை பெறுவதற்காக காத்திருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட அனைத்து சர்வதேச விண்வெளி நிலைய உறுப்பினர்களும் மெக்ஃபாலுக்கு மருத்துவ அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அவர் விண்வெளிக்கு எந்த திட்டத்திற்காக, எப்போது பயணிக்க இருக்கிறார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜான் மெக்ஃபாலின் பெயரை அங்கீகரிப்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
ஜான் மெக்ஃபால் பெருமிதம்:
விண்வெளிக்கு செல்ல தனக்கு ஒப்புதல் கிடைத்தது தொடர்பாக பேசிய ஜான் மெக்ஃபால், "மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டார். மேலும், இந்த செயல்பாட்டில் தான் ஒப்பீட்டளவில் சரியான நபராக இருந்ததாகவும், மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருந்து தேவையான ஒப்புதல்களை மட்டுமே பெற வேண்டியிருந்தது. இது என்னை விட மிகப் பெரியது. இது ஒரு கலாச்சார மாற்றம்" என்று மெக்ஃபால் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

