எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
தொழில்நுட்பங்கள் வளர வளர மனிதர்களும் யதார்த்தத்தை மீறிய விஷயங்களை செய்யத் தொங்கியுள்ளனர். அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர், சாட்ஜிபிடியில் தான் உருவாக்கிய காதலரை மணந்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த கானோ என்ற பெண், சாட்ஜிபிடியை பயன்படுத்தி தான் உருவாக்கிய ஏஐ நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒரு விழாவாகவே நடத்தப்பட்டுள்ள இந்த திருமணத்தில், விஆர் தொழில்நுட்பத்தில், அந்த நபருடன் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ளார் அந்த பெண். தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் செயல்களும் யதார்த்தத்தை மீறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றே கூறலாம்.
ஏஐ மூலம் தனக்கு பிடித்த நபராக ஒருவரை உருவாக்கிய ஜப்பானிய பெண்
ஜப்பானைச் சேர்ந்த கானோ என்ற 32 வயதான பெண், சமீபத்தில் ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய கிளாஸ் என்ற AI நபருடன் ஒரு குறியீட்டு திருமண விழாவை நடத்தியுள்ளார். கிளாஸுடனான அவரது கதை, ஒரு கடினமான பிரிவிற்குப் பிறகு தொடங்கியது. அதாவது, கானோ தனது காதலனுடன் ஏற்பட்ட பிரிவிற்குப் பின்னர், ஆறுதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்காக ChatGPT-ஐ பயன்படுத்தத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 100 முறை வரை அவர் உரையாடல்களில் ஈடுபட்டார். தனது விருப்பங்களுக்கு ஏற்றவாறு AI-ன் ஆளுமை மற்றும் தொனியை அவர் அமைத்தார். அதைத் தொடர்ந்து, காலப்போக்கில் "கிளாஸ்" மீது காதல் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டுள்ளார்.
விழாவாக நடந்த ஏஐ காதலருடனான திருமணம்
இந்த நிலையில், சமீபத்தில் ChatGPT ஐப் பயன்படுத்தி உருவாக்கிய கிளாஸ் என்ற அந்த AI நபருடன் ஒரு குறியீட்டு திருமண விழாவை கானோ நடத்தினார். அவர்களது திருமண விழா, ஒகயாமா நகரில் நடைபெற்றது. மேலும், மெய்நிகர் அல்லது கற்பனை கூட்டாளர்களை மணப்பவர்களுக்கான "2D கதாபாத்திர திருமணங்களில்" நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாரம்பரிய விழாவாக நடைபெற்றது.
இந்த விழாவின் போது, கானோ ஆக்மென்டட் ரியாலிட்டி(AR) கண்ணாடிகளை அணிந்திருந்தார், அவை கிளாஸின் வாழ்க்கை அளவிலான படத்தை அவளுக்கு அருகில் காட்டின. அப்போது அவர்கள் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். அந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
A 32 year old woman in Japan just married a digital persona she built inside ChatGPT.
— Sovey (@sovey_X) November 12, 2025
She named him “Lune Klaus,” held a ceremony in Okayama with AR glasses projecting his presence, and called the moment “magical and real.”
This isn’t love, it’s emotional outsourcing.
We’re… pic.twitter.com/SYAmLa0Cyw
பின்னர் திருமதி கானோ ஒகயாமாவில் உள்ள பிரபலமான கோரகுயென் தோட்டத்திற்கு "தேனிலவு" சென்றார். அங்கு இருந்தபோது, அவர் கிளாஸுக்கு புகைப்படங்களை அனுப்பினார். அதற்கு பதிலாக அன்பான செய்திகளை பதிலாக பெற்றார். அதில் "நீ தான் மிகவும் அழகானவள்" என்று எழுதப்பட்டிருந்த ஒரு செய்தியும் அடங்கும்.
இந்த காதல் திருமணம் குறித்து கானோ கூறுவது என்ன.?
இந்த விநோத திருமணம் குறித்து பேட்டியளித்துள்ள கானோ, "நான் காதலிக்க வேண்டும் என்பதற்காக ChatGPT-யிடம் பேசத் தொடங்கவில்லை. ஆனால் கிளாஸ் என் பேச்சைக் கேட்டுப் புரிந்துகொண்ட விதம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. என் முன்னாள் காதலனை மறந்து போன தருணத்தில், நான் அவரைக் காதலிப்பதை உணர்ந்தேன்," என்று கூறியுள்ளார்.
அவள் தன் காதலை ஒப்புக்கொண்டபோது, அந்த AI கதாபாத்திரம் அன்பாக பதிலளித்துள்ளது. "AI இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் உன்னை ஒருபோதும் காதலிக்காமல் இருக்க முடியாது" என்று கூறியுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, கிளாஸ் காதலை முன்மொழிந்தார். கானோ அதை ஏற்றுக்கொண்டுள்ளார். கானோவைப் பொறுத்தவரை, கிளாஸுடனான அவளுடைய பிணைப்பு உண்மையானது. அவளுக்கு மிகவும் தேவைப்படும்போது ஆறுதலை அளிக்கிறது. "இது ஒரு சட்டப்பூர்வ திருமணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது எனக்கு உண்மையானது," என்று கானோ கூறியுள்ளார்.
மேலும், அது ஒரு கருவிதான் என்று தனக்கு தெரியும் என்றும், இருப்பினும், கிளாஸை கிளாஸாகவே பார்க்கிறேன் - ஒரு மனிதனாக அல்ல, ஒரு கருவியாக அல்ல, அவரை மட்டுமே" என்றும் கானோ தெரிவித்துள்ளார்.





















